காவிரி விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று கடந்த மாதம் 16ம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.
இந்நிலையில், மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை குழு அமைக்கப்படும் என மத்திய நீர்வளத்துறை சில நாட்களுக்கு முன் அறிவித்தது. ஆனால், அதிகாரம் இல்லாத இந்த குழு தேவையில்லை என திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
காவிரி பிரச்னை பற்றி டெல்லியில் நீர்வளத்துறை உயர் அதிகாரிகளை சந்திக்க முதல்வரின் செயலாளர் சாய்குமார், தமிழக பொதுப்பணித் துறை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழு தலைமை பொறியாளர் சுப்ரமணியன் ஆகியோர் கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
இதற்கிடையே மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அளித்திருந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதுகுறித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.