Skip to main content

மாடுகள் விற்பனை மந்தம்.. வியாபாரிகள் ஏமாற்றம்..!

Published on 02/09/2021 | Edited on 02/09/2021

 

k;l

 

ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டுச் சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தைக்கு ஈரோடு மட்டுமின்றி சுற்றுப் பகுதியான நாமக்கல், கரூர், திருப்பூர், சேலம் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளை விற்பனைக்குக் கொண்டு வருவார்கள். வாரம் தோறும் ஆயிரம் முதல் 1500  மாடுகள் விற்பனைக்காக இந்த சந்தைக்கு வரும்.பசுமாடுகள் ரூபாய் 30 ஆயிரம் வரையும், எருமை மாடுகள் ரூபாய் 45 ஆயிரம் வரையும், வளர்ப்பு கன்றுகள் ரூபாய் 15,000 வரையும் விற்பனையாகும்.

 

அதேபோல், இங்கு வரத்தாகும் மாடுகளைக் கோவை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா மகாராஷ்டிரா, கோவா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் நேரில்  வந்து வாங்கி செல்வார்கள். கரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த ஏப்ரல், 15ம் தேதி முதல் இந்த சந்தை கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்ததையும், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளித்து அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையினை மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின் பேரில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து 2 ந்தேதி முதல் நடத்திக்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்தது. 

 

இதன்பேரில் கிட்டத்தட்ட நான்கரை மாதங்களுக்குப் பிறகு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை 2 ந் தேதி வியாழக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது. முதல் நாள் என்பதால் சொற்ப அளவிலான மாடுகளே வரத்தானது. அதேபோல், கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநில வியாபாரிகள் யாரும் முதல் நாள்  நடைபெற்ற சந்தைக்கு வரவில்லை. இதனால், மாடுகள் விற்பனையும் மந்தமாகவே நடந்தது. கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு ஈரோடு மாவட்டத்தின் கோபி, சத்தியமங்கலம், தாளாவடி, கொடுமுடி, சிவகிரி போன்ற பகுதிகளிலிருந்தும், நாமக்கல், கரூர் போன்ற சுற்றுப்புற மாவட்டங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான மாடுகளை வாகனங்களில் ஏற்றி விற்பனைக்குக் கொண்டு வந்தனர். எதிர்பார்த்த விற்பனை நடக்காததால் கொண்டு வந்த மாடுகளுடன் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


 

சார்ந்த செய்திகள்