பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிகளவில் மதிப்பெண் பெற்று சாதிக்கும் ஏழை மாணவர்களுக்கு வேலூர் வி ஐ டியில் ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் இலவசமாக உயர்கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி இந்தாண்டும் ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் இடம் பெற்ற மாணவர்கள் அறிமுக நிகழ்ச்சி வி ஐ டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வி ஐ டி துணைத்தலைவர் டாக்டர். சேகர் விசுவநாதன் பேசும் போது, தமிழ் வழி கல்வியில் பயின்ற நீங்கள் ஆங்கிலத்தை கண்டு பயப்படவோ, அச்சப்படவோ வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம் பேசமுயற்சி செய்தால் போதும், விரைவில் ஆங்கிலத்தில் பேசலாம். ஆரம்பத்தில் ஆங்கிலம் பேசும் போது தவறு நடப்பது இயற்கை தான். ஆங்கிலம் தப்பாக பேசி விட்டோமோ என்று ஆங்கிலம் பேசும் முயற்சியை மாணவர்களாகிய நீங்கள் கை விடக்கூடாது.
வி ஐ டி வேந்தர் டாக்டர். ஜி.விசுவநாதன் தமிழ் வழிக்கல்வி தான் பயின்றார். ஆனால் ஆங்கிலம் பேச வேண்டும் என்ற உந்துதல் இருந்த காரணத்தால் ஆங்கிலம் பேசும் திறமையை சீக்கிரமாக வளர்த்து கொண்டார். தினமும் ஆங்கிலம் நாளிதழ் படிப்பது, அர்த்தம் புரியாத வார்த்தைக்கு அகராதி மூலம் அர்த்தத்தை தெரிந்து கொண்டார். அதே போல் மாணவர்களாகிய நீங்கள் தங்கள் ஆங்கில புலமையை வளர்த்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தாய் மொழி மீது பற்றோடு இருக்க வேண்டும் என்றார். மாணவ, மாணவிகள் ஆங்கிலம் பேசுவதற்கு வி ஐ டியில் சிறப்பு பயிற்சிஅளிக்கப்படுகிறது எனக் கூறினார்.
வி ஐ டி நிர்வாக இயக்குனர் சந்தியா பேசுகையில் +2 வரை மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்திருப்பீர்கள் இனி மேல் நீங்கள் இஷ்டப்பட்டு படிக்க வேண்டும் . மாணவ, மாணவிகளுக்கு நேரம் தவறாமை மிக முக்கியம். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் முழு கவனத்தோடு ஈடுபடவேண்டும். ஆங்கிலம் பேச முயற்சி செய்தால் எளிதில் ஆங்கிலத்தை கற்று கொள்ளலாம் என்றார். வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் மாணவ, மாணவிகளை பாராட்டி பேசுகையில் வி ஐ டி வழங்கி இருக்கும் இந்த வாய்ப்பை மாணவர்கள் நன்றாக பயன்படுத்தி வாழ்க்கையில் உயர வேண்டும். ஆங்கில பய உணர்வை போக்கி மாணவர்கள் சீக்கிரமாக ஆங்கிலத்தில் பேச முயற்சிக்க வேண்டும் என்றார்.
வி ஐ டி முன்னாள் மாணவரும், டெல் நிறுவனத்தின் மூத்த இயக்குனர் இளவரசன் கிருஷ்ணன் சிறப்புரையாற்றுகையில் இங்குள்ள மாணவர்கள்அனைவரும் நட்சத்திர மாணவர்கள் தான். நான் வி ஐ டியில் படிக்கும் இந்தளவுக்கு வசதி கிடையாது. தற்போது மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள பல்வேறு வசதிகள் உள்ளது. மாணவ, மாணவிகள் ஏற்கனவே பல பாடங்களை படித்து விட்டு தான் இங்கு வந்துள்ளீர்கள். அதனால் ஆங்கிலம் உங்களுக்கு கடினமாக இருக்காது. முயற்சி செய்தால் முடியாதது ஒன்றும் இல்லை எனக் கூறினார்.