திருச்சி மாவட்டம் மாதவ பெருமாள் கோவில் மற்றும் தாளக்குடி மணல் குவாரிகளை நம்பி 2,408 மாட்டுவண்டி தொழிலாளர்கள் தங்கள் பிழைப்பை நடத்திவந்தனர். இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக மணல் குவாரிகள் இயங்க அரசு தடை விதித்தது. மாட்டுவண்டி மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்க அரசு காலதாமதப்படுத்தி வருவதால் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என கூறி பலகட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
இதுவரை தமிழ்நாடு அரசு எந்தவித பதிலும் அளிக்காத நிலையில், இன்று (30.09.2021) மூடப்பட்டுள்ள குவாரிகளில் மணல் மாட்டு வண்டிகளுடன் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 600க்கும் மேற்பட்டோர் கொள்ளிடம் ஆற்றில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதை அறிந்து லால்குடி வட்டாட்சியர் சித்ரா, லால்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சீத்தாராமன் மற்றும் போலீசார், போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தாளக்குடி மற்றும் மாதவ பெருமாள் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மாட்டுவண்டி மணல் குவாரிகளைத் திறக்க அனுமதி வழங்கும்வரை இந்த இடத்தைவிட்டு கலைந்து செல்லப் போவதில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.