வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபக், தீபாவிடம் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சட்டமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றயது. இந்நிலையில், வேதா நிலையத்தை அரசுடைமையாக்கிப் பிறப்பித்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், இழப்பீடு நிர்ணயம் செய்ததை எதிர்த்து ஜெ. தீபா இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை ஒன்றாக விசாரித்துவந்தது உயர் நீதிமன்றம். இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று (24/11/2021) தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
அந்த வகையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை இன்று (24/11/2021) மதியம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். சேஷசாயி வழங்கினார். தீர்ப்பில், "வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது. நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் செல்லாது. வேதா நிலையத்தை தீபா, தீபக்கிடம் மூன்று வாரங்களில் ஒப்படைக்க சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்படுகிறது. கீழமை நீதிமன்றத்தில் உள்ள தொகையில் வருமான வரி நிலுவை போக, மீதியை தீபா, தீபக்கிடம் கொடுக்கலாம். வரிப் பாக்கியை வசூலிப்பதற்கான நடவடிக்கையை வருமான வரித்துறை மேற்கொள்ளலாம். நீதிமன்றத்தில் செலுத்திய ரூபாய் 67.95 கோடி இழப்பீட்டை அரசுத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பின்போது, வேதா நிலையம் மற்றும் மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என இரண்டு நினைவிடங்கள் எதற்கு? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.