Skip to main content

“பால் விலை, பஸ் கட்டணம் உயர்வது இயல்பான விஷயம்” -  அமைச்சர் கே.என்.நேரு

Published on 26/03/2022 | Edited on 26/03/2022

 

"It is normal for milk prices and bus fares to go up" - Minister KN Nehru

 

திருச்சியில் 75வது சுதந்திர தின விழா ‘சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா’வையொட்டி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி  மற்றும் பல்துறை பணி விளக்கக் கண்காட்சியினைத் திறந்து வைத்தனர். தொடர்ந்து பல்வேறு துறையில் கீழ் உள்ள பயனாளிகளுக்கு ஒரு கோடியே 70 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

 

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், காடுவெட்டி தியாகராஜன், இனிகோ இருதயராஜ், கதிரவன், அப்துல்சமது, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யாதனஸ், துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள், ‘முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முதல்வரின் துபாய் பயணம் ஆண்டவனுக்கு தெரியும் எனத் தெரிவித்திருந்தது’ குறித்து கேள்வி எழுப்பினர். 

 

இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, “ஜெயக்குமார் ஆண்டவனுக்கு தெரிந்து தான் திருச்சிக்கு கையெழுத்திட வந்துள்ளார். முதலீட்டாளர்களை கொண்டு வர, தமிழகத்தில் வேலைவாய்ப்பு உருவாக்குவதற்காக, சிறந்த மாநிலமாக மாற்ற தமிழக முதல்வர் துபாய் சென்றுள்ளார். அண்ணாமலை எங்கள் மீது குற்றச்சாட்டு கூறவில்லை என்றால் அவரால் கட்சி நடத்த முடியாது. அண்ணாமலை மட்டுமல்ல யார் விமர்சனம் கூறினாலும் மக்கள் திமுக பக்கம் உள்ளனர்.

 

திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுவதற்கான விரிவான திட்ட இறுதி வடிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலத்திற்குள்ளாகவே டெண்டர் பணிக்கு வந்துவிடும். திருச்சி மாவட்டத்தில் உய்யக்கொண்டான் வாய்க்கால் சீரமைக்கும் பணி, காவிரி ஆற்றிலிருந்து நேரடியாக ஜங்ஷன் வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கும் திட்ட மதிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய காவிரி பாலம் கட்டுவதற்கு ஏற்கனவே 90 கோடி என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது 130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

திருச்சி மாநகராட்சி விரிவுபடுத்த கூடிய காரணத்தினால் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். திருச்சியின் முகம் மாறும். திருச்சியை ஒரு முன்மாதிரி மாவட்டமாக கொண்டுவருவதற்கான பணிகள் அனைத்தும் நடைபெறும். தனியார் நிறுவனம் வாயிலாக திருச்சியில் உள்ள குப்பைகளை அள்ளி தூய்மைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

 

மெட்ரோ ரயில் திட்டம் திருச்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக கோவை மாநகருக்கு கொண்டுவருவதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன. மலைக்கோட்டை, வயலூர், ஸ்ரீரங்கம், சமயபுரம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு நாங்கள் எடுத்துக்கூற உள்ளோம். 2.80 லட்சம் கொடுத்து ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகிறது என்பதால் மண் பரிசோதனை உள்ளிட்ட எல்லா பரிசோதனைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு நடைபெறும். பால் விலை, பஸ் கட்டண உயர்வு போன்றவை அந்தந்த காலகட்டங்களில் தகுந்தாற்போல் உயர்வது இயல்பான விஷயம். அதை நாங்கள் திணிக்கவில்லை” என்று தெரிவித்தார். 


இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பள்ளி மாணவர்கள் வேண்டும் என்றே படிக்கட்டுகளில் நின்று செல்லும் நிலை அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டில் அதிகம் நடைபெறுவதாக தகவல் கிடைத்திருக்கிறது. தனியார் அமைப்பின் வாயிலாக அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம். பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் தொங்கிக் கொண்டு வருவதற்கு அனுமதி அளித்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்று ஏற்கனவே கூறி உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்