Skip to main content

பாடப் புத்தகங்களிலிருந்து சாதிப் பெயர்கள் நீக்கம்!

Published on 05/08/2021 | Edited on 05/08/2021

 

Caste names removed from textbooks



1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களில் முக்கியத் தலைவர்களின் பெயர்களுக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாகவே தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்படும் புத்தகங்களில் இருக்கும் சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அண்மையில் தமிழ்நாடு அரசினால் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் புதிய பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டிருந்தன. அப்பாடப் புத்தகங்களில் வரலாறு, கவிதைகள், போராட்டங்கள் போன்றவற்றைக் குறிப்பிடும் பகுதிகளில் முக்கிய தலைவர்களின் பெயர்களுக்குப் பின்னால் இடம்பெற்றிருந்த சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி, 12ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் ‘பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள்’ என்ற தலைப்பில் உள்ள பகுதிகளில் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதர் என்று மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அவருக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயரை தமிழ்நாடு அரசு நீக்கியுள்ளது. 

 

அரசு பாடநூல் கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள மற்ற நூல்களிலும் சாதி அடையாளங்கள் நீக்கப்பட்டுள்ளன. உ.வே. சாமிநாதரின் ஆசிரியர் பெயரான மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பது மீனாட்சி சுந்தரனார் என்று மாற்றப்பட்டுள்ளது. இதேபோல தமிழில் வெளியான முதல் நாவலை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பெயர் மாயூரம் வேதநாயகம் என மாற்றப்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் பெயர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் என மாற்றப்பட்டுள்ளது. 

 

கடந்த மூன்று ஆண்டுகளாகவே பாட நூல்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுவருவதாக தமிழ்நாடு பாடநூல் கழகம் விளக்கமளித்துள்ளது. கடந்த 1978ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, திராவிடர் கழக நூற்றாண்டு விழாவையொட்டி தெருக்கள் மற்றும் சாலைகளில் உள்ள தலைவர்களின் பெயர்களுக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டன. மேலும், 1997ஆம் ஆண்டு தென் மாவட்டங்களில் ஏற்பட்ட இனக் கலவரத்தை அடுத்து, மாவட்டங்களுக்கு வைக்கப்பட்ட தலைவர்களின் பெயர்களை நீக்கியும், அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு சூட்டப்பட்ட தலைவர்களின் பெயர்களை நீக்கியும் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்