அண்ணாமலைப் பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர்கள் நலச்சங்கத்தின் தலைவர் குமாரவேல், பொதுச்செயலாளர் கே.பன்னீர்செல்வம், பொருளாளர் ஏ.பன்னீர்செல்வம் நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசனைச் சந்தித்து மனு ஒன்று கொடுத்துள்ளனர்.
அதில், "கடந்த 2017- ஆம் ஆண்டு நிதி சிக்கல் என்று பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த சி மற்றும் டி பிரிவு ஊழியர்களைக் கலந்தாய்வு செய்யாமல் பல நூறு கிலோ மீட்டர் தூரத்திற்குத் தமிழக அரசின் அலுவலகங்களுக்கு 3 வருட ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மிகவும் சொற்ப ஊதியம் வாங்கும் இவர்கள் குடும்பத்தை மாற்றமுடியாமல், அவர்கள் மட்டும் பணிக்கு அமர்த்திய ஊரில் தங்கி பணி செய்து வருகிறார்கள். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான 60- க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த 3 ஆண்டில் இறந்துள்ளனர்.
இந்தநிலையில் தமிழக அரசின் கூட்டுறவுத் துறையில் பணியமர்த்தப்பட்ட 205 ஊழிர்களின் ஒப்பந்த காலம் கடந்த 11- ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. ஒப்பந்தப் பணிகள் முடிவடைந்த பல்கலைக்கழக ஊழியர்களை மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு அழைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்பந்த காலத்தை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையை நிர்வாகம் கைவிடவேண்டும்.
அதேநேரத்தில் பணி நீட்டிப்பு நடவடிக்கை ஏற்படும் சூழலில் தற்போது பணிநிரவல் சென்ற ஊழிர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அழைத்து கொண்டு பல்கலைக்கழகத்தில் தற்போதுள்ள ஊழியர்களைக் கலந்தாய்வு முறையில் சுழற்சி அடிப்படையில் அரசின் அலுவலகங்களுக்குப் பணிநிரவல் பணிக்கு அனுப்பி வைக்கவேண்டும். பணிநிரவல் சென்ற ஊழியர்களுக்குப் பாகுபாடு இல்லாமல் பதவி உயர்வு வழங்கவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.