Skip to main content

'வழக்கே பதிவு செய்யவில்லை ஏன் முன் ஜாமீன்'-தள்ளுபடி செய்த நீதிமன்றம்

Published on 27/09/2024 | Edited on 27/09/2024
 'The case was not registered, why the anticipatory bail' - the court dismissed

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து வெளியான தகவல் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி லட்டு சர்ச்சைக்கு நடுவே பழனி பஞ்சாமிர்தம் குறித்தும் சில வதந்திகள் பரவியது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்டு தயாரிக்க நெய் விநியோகம் செய்து வந்த திண்டுக்கல்லை சேர்ந்த ஏஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில், அதே டெய்ரியில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கும் பஞ்சாமிர்தம் தயாரிக்க நெய் வாங்குவதாக சந்தேகம் இருப்பதாக தமிழக பாஜகவின் நிர்வாகியான வினோஜ் பி செல்வம், செல்வகுமார் ஆகியோர் எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தனர். பழனி பஞ்சாமிர்தம் குறித்து வலைத்தள பக்கத்தில் தவறாக பரப்பிய பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் மற்றும் செல்வகுமார் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்டம் வயலூர் முருகன் கோவிலின் செயல் அலுவலர் அருண்பாண்டியன் சோமரசம்பேட்டை போலீசாரில் புகார் அளித்திருந்தார்.தமிழக அறநிலையத்துறையும் போலீசில் புகாரளித்ததோடு , பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க ஆவினில் நெய் வாங்குவதாக விளக்கமளித்திருந்தது.

 'The case was not registered, why the anticipatory bail' - the court dismissed

இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் 'உறுதிப்படுத்தாத கருத்துக்களை வலைத்தளத்தில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். கருத்தியல் ரீதியாக எக்ஸ் தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு சண்டை போடுவதால் எந்த பலனும் இல்லை. இந்த கருத்து மோதல் பதிவுகளால் எக்ஸ் தளத்தின் உரிமையாளருக்கு தான் லாபம்' என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் 'பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வத்தின் மீது இதுவரை இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை' என தெரிவிக்கப்பட்டது. வழக்கு பதியாததால் முன்ஜாமீன் தேவையில்லை எனக் கூறி அவருடைய மனுவை மதுரை நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதேபோல முன்னதாக பாஜக நிர்வாகி செல்வகுமாரும் மதுரை நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார், அந்த  மனுவை விசாரித்த நீதிபதி 'பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி செல்வகுமார் தனது செல்போனை காவல்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகைய செயலுக்கு செல்வகுமார் சமூக வலைத்தளத்தில் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக வெளியிடப்பட்ட எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவை நீக்க வேண்டும். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற உத்தரவிட நேரிடும்” என எச்சரிக்கை விடுத்து முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்