ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது பலராலும் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதாவை நக்கீரன் வாயிலாக சந்தித்தோம். அப்போது அவர் தனது கருத்துகளை நம்மிடையே பகிர்ந்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த குழந்தைகளை விட இன்று கண்ணாடி போடும் குழந்தைகளின் எண்ணிக்கை பல மடங்காக மாறிவிட்டது. ஓடி விளையாட வேண்டிய குழந்தைகள் அறைக்குள் ஒன்றரை அடியில் மொபைல் பயன்படுத்துவது உடல்நலத்திற்கு மட்டுமில்லாமல் மன ரீதியாகவும் பாதிப்படைவார்கள். அதனால் இதற்கான சட்டங்களை இயற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும் அது மனித உரிமை மீறலா? ஏன் தனிநபர் சுதந்திரத்தை கட்டுப்படுத்த நினைக்கிறீர்கள்? என்று பல கேள்விகள் எழும். எல்லா சுதந்திரத்திற்கும் சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். சமூகத்திற்குப் பயனளிக்கும் வகையிலும் தனி மனித வளர்ச்சிக்கு பயனளிக்கும் வகையிலும் இருப்பதுதான் சுதந்திரம். அதனால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு சில கட்டுப்பாடுகளை வரையறுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆபாசம், வன்முறை தொடர்பான விஷயங்களைக் குழந்தைகள் சமூக வலைத்தளத்தில் பார்க்கும்போது, அதனுடைய விளைவு மற்றவரை பாதிக்க வாய்ப்பிருக்கிறது. அதோடு மன ரீதியான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தனிமனித சுதந்திரத்தைப் பற்றி இந்த விஷயத்தில் விவாதித்து முடிவெடுத்து கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு சமூக வலைத்தளங்களில் வரும் சில தகவல்கள் திணிக்கப்படுகிறது. அதனால் அரசுக்கு இந்த விஷயத்தில் மிகப்பெரிய கடமை இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை நீக்க வேண்டும் என்று பொள்ளாச்சி சம்பவத்திற்குப் பிறகு பொது நல வழக்கு வந்தது. அதன் பிறகு அது தொடர்பான சில இணையத்தளங்களை முடக்கினார்கள். ஆனால் அது அதிகமாக தொடங்கியது. எனவே டிஜிட்டலான முறைகளை டிஜிட்டலாகதான் கட்டுப்படுத்த முடியும். எக்ஸ், இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் மனித உரிமைப் பற்றி பேசக் காரணம், இன்றைக்கு அரசாங்கமே அதை மீறி நடப்பதால்தான். மணிப்பூர் மற்றும் விவசாய போராட்டத்தின்போது நடந்த கொடுமைகள் சமூகவலைத்தளம் மூலமாகத்தான் அனைவருக்கும் தெரிய வந்தது. இதையெல்லாம் தெரியவிடாமல் அரசாங்கம் இன்று இணையதளத்தை முடக்கி விடுகின்றனர். ஜனநாயகத்திற்காகப் போராடும்போதும் சமூகவலைதளங்கள் பயன்படுத்தப்படுகிறது. அப்போது எந்த சமூகவலைத்தள உரிமையாளர்களும் இது மனித உரிமை மீறல் என்று வரவில்லை. குழந்தைகள் விஷயத்தில் மனித உரிமை மீறல் என்று சொல்லி சமூகவலைத்தள உரிமையாளர் வரும்போது அது சரியானதா? என்று முடிவு செய்ய வேண்டி இருக்கும்.
சாலைகளில் வேகமாக செல்லும்போது கேமரா பொறுத்தப்பட்டு அதைக் கண்காணித்து காவல்துறை அபராதம் போடுவார்கள். நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையில் எதாவது ஆன்லைனில் செய்தால் அதை உடனே உயர்மட்ட அதிகாரிகள் கண்டுபிடித்து விடுகின்றனர். அதுபோல குழந்தைகள் சமூக வலைத்தளங்களில் தேவையற்றதை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பார்த்திருந்தால், பயன்படுத்தப்பட்ட மொபைலின் ஐ.பி.முகவரியைக் கண்டறிந்து ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம். குழந்தைகள்தான் அந்த தேவையற்ற விஷயங்களை பார்த்தார்களா? என்று பெற்றோர்கள் விளக்கம் தரக்கூடிய சூழலை டிஜிட்டல் முறையில் ஏற்படுத்தித் தரலாம். இப்படி செய்வதன் மூலம் தடை செய்யப்பட்ட தரவுகளை குழந்தைகளிடமிருந்து விலக்கி வைக்க உதவியாக இருக்கும். எனவே விஞ்ஞானப்பூர்வமாகதான் இந்த விஷயத்தைக் கையாளவேண்டும் என்றார்.