திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். இருப்பினும் இந்த மனு மீது தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து சூர்யமூர்த்தி தான் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சம்பந்தமான சட்ட திட்டங்களுக்கு விரோதமாகச் செயல்பட்டது தொடர்பாகவும் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளேன்.
அதிலும் குறிப்பாக அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கக் கூடாது எனத் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளேன். இருப்பினும் தான் அளித்துள்ள மனுவுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இதன் காரணமாக கட்சி தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (04.12.2024) விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், “சூர்யமூர்த்தியின் மனு தொடர்பாக அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு பதில் கிடைக்கப்பெற்றது. எனவே இது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்” என வாதிட்டார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், “இந்த விவகாரத்தில் தங்களது தரப்புக்கு நோட்டீஸ் எதுவும் அனுப்பப்படவில்லை. அதனால் தங்களது தரப்பையும் கேட்ட பின்னரே இந்த மனு மீது முடிவெடுக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இவ்வாறு இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், “சூர்யமூர்த்தி தாக்கல் செய்த மனு மீது 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்படுகிறது. அதே சமயம் இந்த விவகாரத்தில், ஓ. பன்னீர்செல்வம் உட்பட அனைத்து தரப்பு கருத்தினையும் கேட்டபின்பே முடிவெடுக்க வேண்டும்” எனவும் உத்தரவிட்டுள்ளனர்.