’’நேற்று (21.06.2018) மாலை சுமார் 5.11மணியளவில் 7448771578 என்கிற எண்ணில் இருந்து எனது தொலைபேசிக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று பேசிய போது எதிர் முனையில் நீண்ட நாள் பரீட்சயம் உள்ளவர் போல் ஒரு பெண் உரிமையோடு எனது பெயரை சொல்லி அழைத்து "நான் பெங்களூரில் இருந்து 777மேக்ஸ் ஆபிஸ் மேனேஜர் பேசுகிறேன்" என மிகவும் இயல்பாக பேசத் தொடங்கினார்.
அப்போது நான் ஓய்வில் இருந்தாலும் கூட "இது மோசடிக்கான அழைப்பு" என்பதை அறிந்து கொண்டு "என்ன விசயம் சொல்லுங்க?" என்றதும், அந்த பெண் "நீங்க சென்னையில் செல்போன் வாங்கியிருக்கீங்க. அது எங்க கம்ப்யூட்டர் ல அப்டேட் ஆகியிருக்கு. அதுல உங்க போன் நம்பர், அட்ரஸ் இருக்கு ஆனா என்ன போன்னுன்னு அப்டேட் ஆகல அதான் போன் பண்ணினோம் என்ன போன் வாங்கிருக்கீங்கன்னு சொல்றீங்களா? பொன்னுசாமி" என கேட்க, "நான் சுத்தி வளச்சு பேசாம என்ன விசயம் என நேரடியாக சொல்லுங்க" என்றேன்.
உடனே அந்தப் பெண் "உங்களுக்கு 23ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பத்து பொருட்கள் கிப்டா கெடச்சிருக்கு அந்த லிஸ்ட சொல்றேன் நோட் பண்ணிக்கங்க" என்றார். நான் எழுதுவது போல் சரி சொல்லுங்க எழுதிக்கிறேன் என்றதும் பட்டியலிடத் தொடங்கினார்.
1) 10லிட்டர் பிரஷர் குக்கர் மதிப்பு 2500.00ரூபாய்,
2) 5லிட்டர் பிரஷர் குக்கர் மதிப்பு 2000.00ரூபாய்,
3) மேக்னடிக் டேபிள் மதிப்பு 2000.00ரூபாய்,
4) ஜூஸ் பண்ற மிஷின் மதிப்பு 1000.00ரூபாய்,
5) சோனா பெல்ட் மதிப்பு 5000.00ரூபாய்,
6) ஆயுர்வேதிக் எண்ணை மதிப்பு 3000.00ரூபாய்,
7) ஆயுர்வேதிக் ஜெல் மதிப்பு 2000.00ரூபாய்,
8). வெஜிடபிள் கட்டர் மதிப்பு 300.00ரூபாய்,
என 8 வகையான பொருட்களை சொன்னதும் திருப்பி என்னிடம் சரி நான் சொன்னதை திரும்ப சொல்லுங்க என்றார். நான் எழுதியிருந்தால் தானே சொல்ல முடியும். ஒரு வழியாக சமாளித்து சரி நான் என்ன செய்ய வேண்டும்? அதை மட்டும் சொல்லுங்க என்றேன்.
அந்த கிப்ட் 2மணி நேரத்தில் உங்கள் வீட்டுக்கு வரும். வரும் போது நீங்கள் டெலிவரி சார்ஜ் மற்றும் வரி 3900.00ரூபாய் அந்தப் பொருட்களை கொண்டு வரும் நபரிடம் கொடுத்து பெற்று கொள்ள வேண்டும் என்றார்.
பெங்களூரில் இருந்து எப்படி 2 மணி நேரத்தில் வீட்டுக்கு அனுப்புவீர்கள்? என கேட்ட போது பெங்களூரில் இருந்து நேற்றைக்கே சென்னை வந்து விட்டது தங்களின் முகவரியை சரி பார்த்து இன்று அனுப்புவோம் என்றார்.
இலவசமாக வரும் பொருளுக்கு நான் ஏன் வரி மற்றும் டெலிவரி சார்ஜ் கட்ட வேண்டும்? அதுமட்டுமன்றி நான் இலவசமாக பொருள் கேட்கவே இல்லையே? எனது முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை தங்களுக்கு யார் தந்தது? என கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு உரிய பதில் கிடைக்காததாலும், இது ஏமாற்று மோசடி வேலை என்பதாலும் தொலைபேசி இணைப்பை துண்டித்தேன்.
எனக்கு எழும் சந்தேகம் என்னவென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் "ப்ளிப்கார்ட்" இணையதளம் மூலம் தான் தற்போது நான் பயன்படுத்தி வரும் கைபேசியை வாங்கினேன். அவர்களுக்கும், எனது சேமிப்பு கணக்கு உள்ள வங்கிக்கு மட்டுமே எனது விவரங்கள் தெரியும். அவ்வாறிருக்க 777மேக்ஸ் ஆபிஸ்" என்கிற நிறுவனத்திற்கு எனது விபரம் எப்படி சென்றது? என தெரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது "ஒருவரை ஏமாற்ற வேண்டுமானால் அவரது ஆசையை தூண்டி விட வேண்டும்" என்கிற "சதுரங்க வேட்டை" திரைப்படத்தின் வசனம் தான் எனது காதுகளில் ஒலிக்கிறது.
வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில் புதிது, புதிதாக மோசடிகள் பெருகி வருகின்றன. ஒருவர் ஏமாந்த பிறகு காவல்துறையில் புகார் அளித்தாலும் உரிய நடவடிக்கைகள் சரி வர எடுக்கப்படுவதில்லை. இப்படி முன்னெச்சரிக்கையாக இருந்து ஏமாறாமல் உரிய ஆதாரங்களோடு புகார் அளித்தாலும் அந்த புகாரை காவல்துறை ஏற்பதில்லை.
மேலும் அனைத்திற்கும் நாம் காவல்துறையை மட்டுமே நம்பியிருப்பதும், அவர்கள் மீது மட்டுமே குற்றம் சுமத்துவதும் சரியல்ல. எந்த ஒரு விசயமாக நமக்கு அலைபேசி வாயிலாக அழைப்பு வந்தாலும் அதன் உண்மை நிலவரத்தை உறுதி செய்து கொள்ளாமல் "சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் மோசடிப் பேர்வழிகள் விரிக்கும் வலையில் சிக்கி நமது வாழ்க்கையும், வாழ்வாதாரத்தையும் இழக்காமல் இருப்பது நமது விழிப்புணர்வில் தான் அடங்கியிருக்கிறது.
பேராசை பெரும் நஷ்டம் என்கிற பழமொழியை நாம் அனைவரும் கவனத்தில் கொண்டு விழிப்போடு செயல்படுவோமானால் நம்மை எந்த மோசடி பேர்வழிகளாலும் ஏமாற்ற முடியாது.’’என்கிறார் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனரும் மாநில தலைவருமான சு.ஆ. பொன்னுசாமி.