தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதோடு உள்கட்டமைப்பு மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரிடரால் மொத்தம் 69 லட்சம் குடும்பங்களும், 1.5 கோடி மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 இலட்சம் ரூபாய் வழங்கிடவும்; அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் அரக்கண்டநல்லூர் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று (04.12.2024) சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நிவாரணம் வழங்கக் கோரி திருக்கோவிலூர் - விழுப்புரம் சாலையில் அமர்ந்து அரகண்டநல்லூர் பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், “உணவு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொடுக்கவில்லை. கடந்த நான்கு நாட்களாக ஒரு அரசு அதிகாரியும் வந்து பார்க்கவில்லை” என வேதனை தெரிவித்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.