அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பின் மூன்றாவது தேசிய இணைய மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “சாதிவாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசு உடனே நடத்த வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சம உரிமை மற்றும் வாய்ப்பு கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அவசியம்.
2021ஆம் ஆண்டே எடுக்கப்பட்டிருக்க வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மத்திய பா.ஜ.க. அரசு உடனே தொடங்கவேண்டும். அதோடு இணைத்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தவேண்டும். இதை செயல்படுத்த பா.ஜ.க. அரசு மறுக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தினால், அதை வைத்து உண்மையான சமூகநீதியை வழங்கவேண்டும் என்றுதான் தயங்குகிறார்கள். சாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்க மறுப்பது மூலமாக சமூகநீதிக்கும், மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தை தள்ளிப் போட்டதால் பெண்ணுரிமைக்கும் எதிராக இருக்கிறது இந்த பா.ஜ.க. அரசு. இதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கவேண்டும். பட்டியலின மக்களின் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவேண்டும். சிறுபான்மையினர் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவேண்டும்.
நீதித்துறையில் இடஒதுக்கீடு செயல்பாட்டிற்கு வரவேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின சமுதாயத்தினருக்கு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு உறுதி செய்யப்படவேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி, அதன் தரவுகளை வெளியிடவேண்டும். இதையெல்லாம் அகில இந்திய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் கண்காணிக்க வேண்டும். சமூகரீதியாகவும் கண்காணிக்கவேண்டும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்தை அமைத்தது. சமூகநீதி ஆணையத்தை அமைத்தது. சமூகநீதி கண்காணிப்புக் குழுவை அமைத்தது. இந்தக் கண்காணிப்புக் குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள் நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக, முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணித்து வருகிறது. இதேபோன்று அனைத்து மாநிலங்களிலும் குழுக்கள் அமைக்கப்படவேண்டும்” எனப் பேசினார்.