சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார். அதன்படி கடந்த ஓராண்டுக்கு மேலாகச் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதே சமயம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அவருக்கு ஜாமீன் வழங்கியதில் முழு அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கியதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில், பாலாஜி சீனிவாசன் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் அபய் ஓகா, ஏ.ஜி. மாசி ஆகியோர் அமர்வில் இன்று (20.12.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “ பண மோசடி வழக்கில் எத்தனை சாட்சிகள் உள்ளனர் என்ற கேள்விக்குக் கடந்த முறை பதில் சொல்வதாகக் கூறினீர்கள் ஆனால் தற்போது வரை பதில் தரவில்லை.
தமிழக அரசின் உறுதியை ஏற்றுக் கடந்த முறை உத்தரவை மாற்றினோம். ஆனால் அதனைத் தமிழக அரசு மதிக்கவில்லை” என கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும் தமிழக அரசுக்கு, உள்துறை செயலாளரை எதிர் மனுதாரராக இணைத்து உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில் பண மோசடி வழக்கில் எத்தனை சாட்சிகள் உள்ளனர் என்ற விவரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.