சாமிக்கு மலர் தூவி தீபாராதனைக் காட்டிய பக்தரின் தீபாராதனை தட்டை பறித்து தூக்கி எறிந்தும், அவரது சட்டையைப் பிடித்து இழுத்தும் தாக்கிய தீட்சிதர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 29ஆம் தேதி தேர் திருவிழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 30ஆம் தேதி (நேற்று) தரிசன விழாவும் நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேர் திருவிழா முடிந்த அன்று மாலை தேரிலிருந்து இறங்கி கோவிலுக்கு கீழ சன்னதி வாயிலாக சாமி ஊர்வலம் செல்லும் வழியில், கோவில் வாசலில் உள்ள கீழ சன்னதியில் வசிக்கும் பக்தர் பாலசுப்பிரமணியம் (65), சாமி தூரத்தில் வரும்போது மற்றவர்களைப் போல் பூக்கள் தூவி தீபாராதனைக் காட்டியுள்ளார். மற்றவர்களை எதுவும் சொல்லாத தீட்சிதர்கள் பாலசுப்பிரமணியத்திடம் எதிர்ப்பு தெரிவித்து அவரது தீபாராதனை தட்டை பறித்து தூக்கி எறிந்தும், அவரது சட்டையைப் பிடித்து இழுத்தும் தாக்கியுள்ளனர்.
இதனை காவல்துறையினர் தடுத்துள்ளனர். ஆனால், அதையும் மீறி அவர்களைத் தள்ளிவிட்டு தாக்கியுள்ளனர். இதுகுறித்து பாலசுப்பிரமணியம், சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஸ்ரீ வர்ஷன், முத்து, சோமு உள்ளிட்ட சிலர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவிழா முடிந்த கையோடு சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கூறுகையில், “நாங்கள் பரம்பரை பரம்பரையாக சாமி வரும்போது தீபாராதனை காட்டுவது வழக்கம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு, தன் கட்டுப்பாட்டில் எடுத்து நிர்வகித்தது. அப்போது கருவறையில் தேவாரம், திருவாசகம் பாட தமிழகத்திலுள்ள சிவனடியார்களை அழைத்துவந்து கருவறை முன்பு நிற்கவைத்து தேவாரம், திருவாசகம் பாட அனைத்து ஏற்பாடுகளையும் நான் செய்தேன்.
நான், தமிழர் தேசிய முன்னணி இயக்கத்தின் கடலூர் மாவட்ட பொருளாளராக உள்ளேன். இதனால் ஆத்திரமடைந்த தீட்சிதர்கள் அன்றைய தினத்திலிருந்து என்மீது பகையுடன் நடந்துகொள்கிறார்கள். சித்சபையில் தீட்சிதர்கள் பிராமணர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் தேவாரம், திருவாசகம் பாடக்கூடாது, அப்படியே பாடினாலும் சித்சபையில் கீழே நின்றுதான் பாட வேண்டும். சித்சபையில் நின்று தேவாரம் பாட வேண்டும் என்ற ஆறுமுகசாமியின் தொடர் போராட்டத்தில்தான் கோவிலை அரசு கையகப்படுத்தியது. எனவே, இதனால் ஆத்திரமடைந்த தீட்சிதர்களால் ஒவ்வொரு தேர் மற்றும் தரிசன விழாவிலும் இதுபோன்று தாக்குதல் சம்பவம் நடைபெறுகிறது. இது குறித்து அவ்வப்போது காவல்நிலையத்தில் புகார் அளித்தால் சி.எஸ்.ஆர். காபியுடன் சமாதானம் முடிந்துவிடும். தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களைக் கைது செய்ய வேண்டும்” என்றார்.