7 உட்பிரிவுகளைச் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கும் சட்டத்திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால், அதை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில், குடும்பன், பள்ளன், கடையன், காலாடி, பண்ணாடி, வாதிரி ஆகிய உட்பிரிவுகளைச் சேர்ந்த மக்களை, 'தேவேந்திர குல வேளாளர்' என ஒரே பெயரில் அழைக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு, நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கான நடைமுறைகளை நிறுத்தக் கோரியும் அரசிதழில் வெளியிடக் கூடாது என உத்தரவிடக் கோரியும் கரூரைச் சேர்ந்த கார்வேந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எம்.பி. கூட இல்லை. இந்தநிலையில், குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களின் அரசியல் லாபத்துக்காகவும், தேர்தல் ஆதாயத்துக்காகவும் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சட்டத் திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தற்போதைய நிலையில் இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.