இந்தோனேஷியா நாட்டில் உள்ள ஒரு நிறுவன ஊழியர்கள், சேலத்தைச் சேர்ந்த பெண்ணிடம் சுண்ணாம்புக் கல் இறக்குமதி செய்து தருவதாகக் கூறி, 42.42 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவருடைய மனைவி பூவிழி (40). இவர், வெளிநாடுகளில் இருந்து சுண்ணாம்புக் கல் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துபாய், பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்து சுண்ணாம்புக் கல் இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்திருந்தார். அப்போது, அந்த நாடுகளில் இருந்து கப்பலில் சரக்கைக் கொண்டு வர ஆன்லைன் மூலம் இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார். அந்த நிறுவன அதிகாரிகளும், சுண்ணாம்புக் கல் சரக்கை காரைக்கால் துறைமுகத்திற்கு கப்பலில் கொண்டு வந்து இறக்க ஒப்புக்கொண்டு 42.42 லட்சம் ரூபாய் (52 ஆயிரம் டாலர்) வாடகை பேசினர்.
அதன்பேரில், பூவிழியும் வாடகைத் தொகையை ஆன்லைன் மூலம் அந்த நிறுவனம் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு செலுத்தினார். பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த நிறுவனத்தார், அதன்பின் பூவிழியை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பூவிழி, இதுகுறித்து விசாரித்தபோது அந்த நிறுவன அதிகாரிகள் ஏமாற்றிவிட்டது தெரிய வந்தது.
இதையடுத்து பூவிழி, சேலம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் கைலாசம் தலைமையில் காவல்துறையினர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்தோனேஷியா நிறுவனத்தில் பணியாற்றி வரும் எம்.சி.குண்டு, ஆர்.கே.நாக், தீபக், எஸ்.சி.ஜனா ஆகியோர்தான் பூவிழியிடம் சுண்ணாம்புக் கல் சரக்கை கப்பலில் கொண்டு வந்து சேர்ப்பதாகக் கூறி 42.42 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. வாடகைப் பணம் செலுத்தப்பட்ட, இந்தோனேஷியா நாட்டின் வங்கி கணக்கு யார் பெயரில் உள்ளது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். மோசடி செய்த பணத்தை மீட்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.