நடக்க இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சியின் அதிமுக மேயா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள 11-ம் வாா்டில் போட்டியிடும் ஸ்ரீலிஜாவின் தந்தை நாஞ்சில் முருகேசன். ரியல் எஸ்டேட் அதிபராக இருக்கும் இவர் ஆரம்பத்தில் பாஜக நகரப் பொருளாளராக இருந்து பின்னர் அங்கியிருந்து அதிமுகவில் இணைந்தார். 2011 முதல் 2016 வரை அதிமுக நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ ஆக இருந்தார். மேலும் 4 மாதம் மா.செ. ஆகவும் இருந்தார். சில குற்றச்சாட்டு அவர் மீது எழுந்த காரணத்தால் அவரின் மா.செ பதவியை ஜெயலலிதா பறித்தார். இருந்தும் தொடர்ந்து அதிமுகவில் நாஞ்சில் முருகேசன் இருந்து வந்தார். இந்த நிலையில் 2017-ல் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தை சேர்ந்த 13 வயது இளம் பெண்ணுக்கு நாஞ்சில் முருகேசன் பாலியல் தொந்தரவு கொடுத்ததையடுத்து அவரை நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையம் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது. இதை தொடர்ந்து அதிமுகவிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
பின்னர் அமமுக ஆதரவாளராகச் செயல்பட்டு வந்த நாஞ்சில் முருகேசன் மீண்டும் அதிமுக ஆதரவாளராக மாறினார். இதை தொடர்ந்து அவரின் மகள் ஸ்ரீ லிஜாவை நாகர்கோவில் மாநகராட்சி மேயா் வேட்பாளராக அதிமுக அறிவித்ததையடுத்து, மகளை வெற்றி பெற வைக்க இரவு பகலாக வாா்டு முழுவதும் கரன்சி கட்டுகளுடன் சுற்றி வந்தார்.
இந்த நிலையில் வில்லுக்குறி திருவிடைக்கோட்டை சேர்ந்த குமார் (47) என்பவர் 13-ம் தேதி இரவு காயங்களுடன் ஆசாாிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதை தொடர்ந்து இரணியல் போலீசாா் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் என்னுடைய மனைவி விஜயஸ்ரீக்கும் நாஞ்சில் முருகேசனுக்கும் தொடர்பு இருக்கிறது, நான் வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்த போது முன் கதவின் உள் பக்கம் பூட்டு போடப்பட்டிருந்ததையடுத்து சைடு பக்கம் வந்து ஜன்னலைத் திறந்து பார்த்த போது எனது மனைவியும் நாஞ்சில் முருகேசனும் உல்லாசமாக இருந்ததைக் கண்டு சத்தம் போட்டேன். இதனால் கதவைத் திறந்து வெளியே வந்த நாஞ்சில் முருகேசனும் அங்கு நின்று கொண்டிருந்த அவருடைய டிரைவா் மகேஷ் இருவரும் சேர்ந்து என்னைச் சரமாரியாகத் தாக்கி விட்டு காாில் சென்றனர் எனப் போலீசில் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து போலீசாா் நாஞ்சில் முருகேசன் மீது 294(பி),323,506 ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள நாஞ்சில் முருகேசனை தேடி வருகின்றனர். இதற்கிடையில் இன்று தேர்தல் பிரச்சாரத்துக்காக நாகர்கோவில் வந்த ஓபிஎஸ்-ஐ வரவேற்று பத்திரிகைகளில் விளம்பரம், பதாகைகள் வைத்துள்ளார் நாஞ்சில் முருகேசன்.