Skip to main content

முன்னாள் முதல்வர் படம் அச்சிட்ட பாடப்புத்தகங்கள் விநியோகிக்க தொடரப்பட்ட வழக்கு..

Published on 13/07/2021 | Edited on 13/07/2021

 

Case filed against former chief minister for distributing picture printed textbooks.

 

முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி புகைப்படங்களோடு இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுகளை விநியோகம் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

 

சென்னை உயர் நீதிமன்றத்தில் நமது திராவிட இயக்கம் என்ற அமைப்பின் தலைவர் ஓவியம் ராஜன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். அந்த வழக்கில், தற்போது இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களைப் பள்ளி  மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள் நோட்டுகள், பைகள் உள்ளிட்டவற்றில் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, பழனிசாமி படங்கள் இருப்பதனால் அவற்றை விநியோகிக்க வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பொது மக்களுடைய வரிப் பணத்தை வீணாக்கக் கூடாது என்றும் இரண்டு அரசுகளுக்கு இடையேயான ஈகோவினால் இதுபோல் செய்யக்கூடாது என்றும் குறிப்பிட்ட அவர், ஏற்கனவே பிரிண்ட் செய்யப்பட்ட பாடப்புத்தகங்கள், நோட்டுகள், பைகளை வீணாக்கக்கூடாது, அவற்றை மாணவர்களுக்கு விநியோகிக்க உத்தரவிட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோல பாடப்புத்தகங்கள் நோட்டுகள், பைகளில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களைப் பிரிண்ட் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

 

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (13.07.2021) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை நான்கு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்