
அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் கடந்த வாரம் டிசம்பர் 7ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை கடந்த 6ஆம் தேதி அறிவித்தது. இந்நிலையில், அதிமுகவில் நடைபெற்ற இருந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை அங்கீகரிக்கக் கூடாது என்றும் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தை இந்த வழக்கில் ஏன் சேர்த்தீர்கள் என்று கேள்வி எழுப்பியதுடன், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று (14.12.2021) காலை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தொடுத்த ஜெயச்சந்திரன் மனு விசாரணைக்கு உகந்தது இல்லை எனக் கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.