சேலம் மேட்டூர் பாமக எம்.எல்.ஏ சதாசிவம் குடும்பத்தின் மீது அவரது மருமகள் வரதட்சணைப் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி பாமகவைச் சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி பேபி. இவர்களுக்கு சங்கர் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு சங்கருக்கும் சேலம் சர்க்கார் கொல்லப்பட்டியைச் சேர்ந்த மனோலியா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் எம்.எல்.ஏ சதாசிவம் மகன் சங்கர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது மனோலியாவுக்குத் தெரிய வந்திருக்கிறது. இது குறித்து அவர் தனது கணவரிடம் கேட்கும் போது சரிவரப் பதிலளிக்காமல் சண்டை போட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது.
இது ஒரு புறமிருக்க, சங்கர் மனோலியாவிடம் நகை பணம் கேட்டு அடிக்கடி அடித்துத் துன்புறுத்தி வந்திருக்கிறார். இதுகுறித்து மாமனார் சதாசிவத்திடம் தெரிவித்த போது, அவரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன வேதனையடைந்த மனோலியா, தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து நடந்ததைச் சொல்லி அழுதுள்ளார். இதனைத் தொடர்ந்து மனோலியா, சதாசிவம் குடும்பத்தினர் மீது வரதட்சணை புகார் கொடுத்திருக்கிறார். அதன்பேரில் சதாசிவம், அவரது மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால், வழக்கின் விசாரணைக்கு சங்கர் நேரில் ஆஜராகாமல் இழுத்தடிப்பதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று வழக்கு தொடர்பாகக் காவல்நிலையத்தில் ஆஜராகி போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகக் கூறி சம்மனைப் பெற்றுக்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சதாசிவம், எனது மருமகள் குடும்ப பிரச்சனையில் பக்குவமில்லாமல் போலீஸை நாடியுள்ளதாகவும், வழக்கறிஞர்களின் பேச்சைக் கேட்டு பொய்யாகப் புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.