பாலக்கோடு அருகே, கார் ஓட்டுநரை குடும்பத்தினரே கூலிப்படையினர் மூலம் கழுத்து அறுத்துக் கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ் என்கிற சூர்யா (வயது 38). கார் ஓட்டுநர். இவருடைய மனைவி சாமுண்டீஸ்வரி (வயது 32). தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். சுரேஷ், கடந்த சில ஆண்டுகளாக தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சுரேஷூக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம்
இருந்துள்ளது.
அடிக்கடி மது குடித்துவிட்டு, சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். பாலக்கோடு அருகே, அண்ணாமலைஅள்ளியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்கச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
ஆக. 19- ஆம் தேதி மதியம், அவர் மோட்டார் சைக்கிளில் வழக்கம்போல் அண்ணாமலைஅள்ளியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றார். அன்று இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவர், ஆரதஅள்ளி கூட்டுசாலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு காவல்நிலைய காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். சுரேஷை மர்ம நபர்கள் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
தீவிர விசாரணையில், சுரேஷை அவருடைய குடும்பத்தினரே கூலிப்படையினர் மூலம் கழுத்து அறுத்துக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அவருடைய மாமியார், உறவினர்கள் இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.