திருவாரூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கார் குளத்தில் மூழ்கி பச்சிளம் குழந்தை உட்பட நான்கு பேர் பலியான சம்பவம் பெருத்த சோகத்தை உண்டாக்கியிருக்கிறது.
சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த சாமிநாதன், கணபதி, பானுமதி, லட்சுமி மற்றும் லட்சுமியின் கைக்குழந்தையான லட்சுமி நாராயணன் ஆகிய ஐந்து பேரும் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை வழியாக சென்னைக்குக் காரில் சென்றனர். திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை சாலையில் சென்ற போது விசலூர் பகுதியில் மெயின்ரோட்டில் அமைந்துள்ள குளத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து குளத்துக்குள் பாய்ந்தது. இதனைக் கண்டு சாலையில் சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து குளத்தில் குதித்து அவர்களைக் காப்பாற்ற முயற்சித்தார்கள். அவர்களால் லட்சுமி என்கிற பெண்ணை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.
மீட்கப்பட்ட லட்சுமியை உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு நன்னிலம் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைவாக அங்கு வந்து காரையும் அந்த காரில் பயணித்த பானுமதி, கணேசன், சாமிநாதன் மற்றும் பச்சிளம் குழந்தை லட்சுமி நாராயணன் ஆகியோரை சடலமாக மீட்டனர். நால்வரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து நன்னிலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.