கோவை மாநகரில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்துவந்த இருவரை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாநகரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து கஞ்சா போன்ற போதைப் பொருட்களை சமூக விரோத கும்பல்கள் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்துவந்தது. இதையடுத்து, மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையாளர் சட்டம் ஒழுங்கு டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆகியோரின் உத்தரவின் பேரில், மாநகரில் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பிலும், வாகன சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, காவல்துறை சார்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டும், கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை சிங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த் உதவி ஆய்வாளர் அர்ஜுன் தலைமையிலான போலீசார் சிங்காநல்லூர் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சந்தேகப்படும்படியாக 2 பேர் இரண்டு சக்கர வாகனத்தில் வந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி நடத்திய சோதனையில், 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும், காவல் நிலையம் அழைத்துவந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவிநாசியை சேர்ந்த கதிரேசன் (35), திருப்பூர் தென்னம்பாளையம் சேர்ந்த கதிர் ராஜா (37) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாகவே கடந்த சில மாதங்களாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா, போதை மாத்திரை போன்றவற்றை பயன்படுத்தும் எண்ணிக்கைகள் அதிகரித்து வருகிறது. ஆகவே, காவல்துறையினர் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் உடன் இணைந்து போதைப் பொருளை பயன்படுத்துவதின் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.