
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பழைய சந்தைக் கடை அருகில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையிலான போலீஸார், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.
விசாரணையில் ஒருவர் மேட்டுப்பாளையம் பழைய சந்தைக் கடைப் பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை பார்க்கும் நாகராஜ் (36) என்பதும், மற்றொருவர் லிபின் (31) என்பதும், கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. தற்போது, மேட்டுப்பாளையத்தில் தங்கி பூக்கடையில் பணிபுரிவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், இருவரும் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் ஒப்புக்கொண்டனர். இதில், மற்றொருவர் தலைமறைவாகி உள்ளார். அவரை போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
இதனையடுத்து அவர்களைக் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், மேட்டுப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட 15.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருவரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல் நேற்று அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இருவரைக் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 5.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.