கம்பம் வனப்பகுதிகளில் உள்ள முட்புதரில், 50 லட்சம் மதிப்புடைய கஞ்சா தோட்டத்தை, மோப்பநாய் உதவியுடன் போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.
தேனி மாவட்டத்தில், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுப்பதற்காக, தேனி எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி, தீவிர நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து கம்பம் பகுதியில் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையிலான போலீசார், தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கம்பம் மணிகட்டி ஆலாமரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியை ஒட்டிய தோட்டத்தின் முட்புதரில், கஞ்சா பயிரிட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று காலை உத்தமபாளையம் டி.எஸ்.பி சின்னக்கண்ணு தலைமையில், இன்ஸ்பெக்டர் சிலைமணி, எஸ்.ஐ திவான்மைதீன், தனிப்படை போலீசார், கம்பம் மேற்கு வனத்துறை ரேஞ்சர் அன்பு மற்றும் மோப்பநாய் வெற்றி, பயிற்சியாளர் சிறப்பு எஸ்.ஐ.ஜெகநாதனுடன் மணிகட்டி ஆலமரம் மேற்குப் பகுதி மலையடிவாரப் பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு முட்செடிகள் அடங்கிய புதருக்கு நடுவே சுமார் 5 சென்ட் நிலப்பரப்பளவில் 150 கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு 6 அடி முதல் 8 அடி உயரம் வரை வளர்ந்திருந்தது தெரியவந்தது. போலீசார் மற்றும் வனத்துறையினர் கஞ்சா செடிகளை வெட்டி ஒரு இடத்தில் குவித்து, தீ வைத்து அழித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறும் போது, அழிக்கப்பட்ட செடிகள் மூலம் சுமார் 500 கிலோ கஞ்சா கிடைக்கும். இதனுடைய மதிப்பு சுமார் ஐம்பது லட்சம் வரை இருக்கும். ஆனால், இந்த இடம் யாருடையது. கஞ்சா பயிரிட்டவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார்கள். இப்படி மோப்பநாய் உதவியுடன் வனப்பகுதியில் 50 லட்சம் பெறுமான கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.