Skip to main content

சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை; பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை!

Published on 23/11/2024 | Edited on 23/11/2024
Counting of votes for Assembly elections; BJP alliance continues to lead!

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 20ஆம் தேதி (20.11.2024) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு  நவம்பர் 13 மற்றும் 20ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக  இந்த இரு மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று (23.11.2024) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மதியத்திற்குள் முன்னிலை நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு  உத்தரப்பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட 14 மாநிலங்களில் நடைபெற்ற 48 சட்டப்பேரவை தொகுதிக்காக நடைபெற்ற  இடைத்தேர்தலுக்கான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.

மேலும் கேரளாவின் வயநாடு, மகாராஷ்டிராவின் நாந்தேட் ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன. இதனையொட்டி வாக்கு எண்ணும் மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. அரசியல் கட்சியினர் வாக்கு எண்ணும் மையங்களில் குவிந்து வருகின்றனர். அதே சமயம் கட்சி அலுவலகங்களிலும் கொண்டாட்டங்களுக்குத் தொண்டர்கள் தயாராக உள்ளனர். இதன் மூலம் இரு மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்கள் மத்தியிலும், அரசியல் கட்சியினர் மத்தியிலும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் 145 ஆகும். இந்நிலையில் காலை 10 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 201 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 77 இடங்களிலும், மற்றவை 10 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. ஜார்க்கண்டில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் 41 ஆகும். இத்தகைய சூழலில் காலை 10 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 40 இடங்களிலும், ஜெ.எம்.எம். தலைமையிலான கூட்டணி 40 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மற்றவை ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து இரு மாநிலத்திலும் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் காலை 10 மணி நிலவரப்படி வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி சுமார் ஒரு லட்சம்  வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 2வது இடத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் 35 ஆயிரத்து  943 வாக்குகள் பெற்றுள்ளார். 

சார்ந்த செய்திகள்