சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவனைத் தந்தையும் உறவினர்களும் சேர்ந்து விஷ ஊசி செலுத்திக் கொன்ற சம்பவத்தில் தனியார் ஆய்வக ஊழியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியில் உள்ள கட்சுபள்ளி கிராமத்தில் வசித்து வருபவர்கள் பெரியசாமி-சசிகலா தம்பதியினர். லாரி ஓட்டுநரான பெரியசாமிக்கு 14 வயதில் வண்ணத்தமிழ் என்ற மகன் இருந்தான். அண்மையில் மருத்துவ பரிசோதனையில் வண்ணத்தமிழின் காலில் புற்றுநோய் கட்டி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வண்ணத்தமிழின் அப்பா பெரியசாமி கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மகனைச் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார். இருப்பினும் உடல்நலம் குன்றியதால் வண்ணத்தமிழனை வீட்டுக்கே கொண்டுவந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அண்மையில் மிகவும் உடல்நலம் குன்றிய வண்ணத்தமிழ் எழுந்து நடக்க முடியாமல் படுத்தப்படுகையாக ஆகிவிட்ட நிலையில் உடல் முழுவதும் புற்றுநோய் பரவி புண் ஏற்பட்டு சீல் பிடித்த நிலையிலிருந்துள்ளார். தினம் தினம் அவதிப்பட்டுவந்த வண்ணத்தமிழன் படும்பாட்டைக் கண்டு மனம் ஒப்பாத தந்தை பெரியசாமி தனியார் ஆய்வகத்தில் வேலை செய்யும் பிரபு என்பவரை அழைத்து வந்து விஷ ஊசி செலுத்தி மகன் வண்ணத்தமிழை கொன்றதாக ஊர் முழுக்க தகவல் பரவியது.
இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்த போலீஸார் முதல்கட்டமாகச் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். சிறுவன் வண்ணத்தமிழின் உடல் சேலம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. சிறுவனின் தந்தை பெரியசாமி மற்றும் பிரபு ஆகியோரைப் பிடித்துச் சென்று போலீசார் விசாரித்தனர். சிறுவனின் தாய் சசிகலாவோ தன்னுடைய கணவர் விஷ ஊசி செலுத்தவில்லை என போலீசாரிடம் தெரிவித்திருந்த நிலையில், போலீசாரின் தீவிர விசாரணையில் தான்தான் விஷ ஊசி செலுத்த ஏற்பாடு செய்ததாகத் தந்தை பெரியசாமி ஒப்புக்கொண்டார். மேலும், தன் மகன் படும்பாட்டை தன்னால் காணமுடியவில்லை என்பதற்காகத் தனியார் இரத்த பரிசோதனை ஆய்வகம் நடத்திவரும் வெங்கடேஷ் என்பவரை அணுகியுள்ளார் பெரியசாமி. ஆனால் வெங்கடேஷ் இதுகுறித்து தனக்குத் தெரியாது வேண்டுமானால் ஆய்வக உதவியாளராக இருக்கும் பிரபுவைத் தொடர்புகொள்ளுங்கள் எனக்கூறப் பிரபுவைத் தொடர்புகொண்ட பெரியசாமி பிரபுவிடம் எடுத்துக்கூறி மகன் வண்ணத்தமிழுக்கு விஷ ஊசி செலுத்தவைத்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். தற்பொழுது சிறுவனின் தந்தை பெரியசாமி, வெங்கடேஷ், பிரபு ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.