சிதம்பரம் வடுகநாதன் தியேட்டரில் இரவு இரண்டாவது சினிமா (second show) ஆரம்பிக்கும் நேரத்தில் படம் பார்பதற்கு வந்த அமமுக நிர்வாகி மில்லர் தியேட்டருக்கு அருகே அவரது இரு சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது தியேட்டர் ஊழியர்கள் அங்கு வண்டியை நிறுத்தாதீர்கள் என்று கூறியுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இதனையறிந்து தியேட்டருக்கு வந்த அமமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி வக்கில் பிரபு (35) தலைமையில் சிதம்பரம் பகுதியை சார்ந்த நிவேஷ்(22) அரவிந்ராஜ்(32) சந்தோஷ்குமார்(21), கிருபாகரன்(21), சூர்யா, சிவா, சோழமணி, அருண், ராம்ஜி, நட்ராஜ் ஆகியோர் தியேட்டரில் ஆயுதங்களுடன் நுழைந்து மேலாளர் மரிஅலெக்சாண்டரை கொலைவெறியுடன் வன்முறையில் தாக்கி தியேட்டரில் உள்ள பொருட்களை அடித்து உடைத்துள்ளனர். இதனால் அவருக்கு கை முறிவு ஏற்பட்டு, தலை, தோல்பட்டை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் காவல்துறையினர் வன்முறையில் இருந்து அவரை மீட்டு அண்ணாமலைநகர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து சிதம்பரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.
இந்தநிலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என்ற மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநேவ் உத்திரவின் பேரில் சிதம்பரம் காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் தனிக்குழு அமைக்கப்பட்டு தேடிவந்தநிலையில் அமமுக குமராட்சி ஒன்றிய செயலாளர் மில்லர். நிவாஷ், அரவிந்ராஜ், கிருபாகரன், சந்தோஷ்குமார் ஆகியோர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து ஆயுதங்களை கைபற்றியுள்ளனர். மேலும்
தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் பிரபு உள்ளிட்ட 7 பேருக்கு காவல்துறை தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். இரவில் இந்த சம்பவத்தால் சிதம்பரம் நகரில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.