புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் ஊராட்சி போரம் கிராமத்தில் மனநலம் பாதித்த தாயோடு மண் குடிசையில் வசிக்கும் பள்ளிச் சிறுமி சத்தியா குடும்ப பாரத்தைப் போக்க விவசாயக் கூலி வேலைக்குச் சென்று வந்தார். மன தைரியத்தோடு குடும்ப பாரம் சுமக்கும் சிறுமியின் நிலை, அவரது படிப்பு மற்றும் வீடு போன்றவற்றிற்கு அரசு உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். இந்த செய்தியை முதன் முதலில் செப்டம்பர் 3 ஆம் தேதி நக்கீரன் இணையத்தில் செய்தி மற்றும் வீடியோவாக வெளியிட்டோம்.
செய்தி வெளியான நிலையில் சிறுமிக்காக உதவ பல நல் உள்ளங்கள் முன்வந்து உதவிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் 4 ஆம் தேதி காலை ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய்த் துறை அதிகாரிகள் சத்தியா வீட்டிற்குச் சென்று வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் சிறுமியை நேரில் சந்தித்து 'உனக்காக நாங்கள் இருக்கிறோம்' என்று தைரியம் கொடுத்து பல உதவிகளையும் செய்தார். அந்த உதவிப் பொருட்களை கூட வைக்க இடமின்றி மழைக்கு ஒழுகும் மண் குடிசையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
மக்கள் பாதை அமைப்பினர் தொடர்ந்து சத்தியா குடும்பத்திற்கான உதவிகளை செய்து வரும் நிலையில், இன்று 5 ந் தேதி சத்தியாவின் தாய்க்கு மாற்றுத்திறனாளி சான்று வாங்குவதற்காக கந்தர்வகோட்டை அழைத்துச் சென்று சான்று பெற்றனர்.
இந்தநிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட மனநல திட்ட அலுவலர் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் சத்தியாவின் வீட்டிற்குச் சென்று அவரது தாயிடம் நீண்ட நேரம் பேசி ஆலோசனைகள் வழங்கினார். அதோடு, அவரது ஆழ்மன துயரங்களை வெளிக்கொண்டு வந்து சகஜ நிலைக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். தொடரந்து அவருக்குத் தேவையான ஆலோசனைகளும் மருந்துவ உதவிகளும் தேவைப்படுகிறது. அதனால் அவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார்.
மேலும் சத்தியாவிடம் மன தைரியத்துடன் எதையும் எதிர்கொள்ள வேண்டும். படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வேறு எந்தப் பிரச்சனைகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டாம். இப்படிச் சிந்தனை மாறியதால் தான் 10 ஆம் வகுப்பை விட 12 ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைந்துள்ளது என்று பல்வேறு உளவியல் ஆலோசனைகள் வழங்கினார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சத்தியா குடும்பத்தின் மீது தனிக்கவணம் செலுத்தி அரசு உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதைப் பார்த்து கண்கலங்க சத்தியா மற்றும் உறவினர்கள் நன்றி கூறினார்கள்.
சிறுமி சத்தியா கூறும்போது.. என்னையும், என் குடும்பம் பற்றியும் அறிந்து, ஒழுகும் குடிசையில் வாழ்வதைப் பார்த்து 'மக்கள் பாதை' அமைப்பினர் உதவிகள் செய்தனர். தொடர்ந்து நக்கீரன் போன்ற ஊடகம் என் நிலையை வெளிச்சம் போட்டு காட்டியதால் இன்று உலகம் எங்கும் உறவுகள் கிடைத்திருக்கிறார்கள். அனைவரும் சொல்லும் முதல் வார்த்தை நாங்கள் இருக்கிறோம் என்பது தான். அதைக் கேட்கும் போது கண்ணீர் வருகிறது. ராமநாதபுரத்தில் இருந்து ஒரு தாத்தா பேசும் போது அழுதுகொண்டே பேசினார் நானும் அழுதுவிட்டேன். என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன் என்று அந்த தாத்தா சொன்னது ரொம்ப ஆறுதலாக இருந்தது. பலரும் ஆறுதலாகப் பேசியதே எனக்கு நிம்மதியும், பலத்தையும் கொடுத்திருக்கிறது என்றார்.