தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா இன்று (28.12.2023) காலை 11.15 மணியளவில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற இருந்தது. இந்த சூழலில் நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற இருந்த வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா ரத்து செய்யப்பட்டு சென்னை, பெரியார் திடலில் எளிய முறையில் நடைபெற்றது. அப்போது தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயனும் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் 'தமிழரசு' அச்சகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “வைக்கம் போராட்டம் (1924-2023) நூற்றாண்டு மலரினை” வெளியிட கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தந்தை பெரியாரின் சிலையினை நினைவுப் பரிசாக வழங்கினார். இவ்விழாவில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ. சாமிநாதன், சேகர்பாபு, தங்கம் தென்னரசு, கே.என். நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், திரைக் கலைஞருமான அன்பு நண்பர் கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி, இன்று (28.12.2023) சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறவிருந்த ‘வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா’வானது ரத்து செய்யப்பட்டு, சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் 'பெரியாரும் வைக்கம் போராட்டமும்' நூல் வெளியீடு மற்றும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர் வெளியீடு எளிய முறையில் நடைபெற்றது” எனத் தெரிவித்துள்ளார்.