விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள மீனவர் குப்பமான எக்கியர் குப்பத்தின் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட விஷச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்து 66 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ல் இருந்து 8 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே மரக்காணத்தில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் செங்கல்பட்டிலும் 8 பேர் உயிரிழந்துள்ளதால் விஷச்சாராய உயிரிழப்புகள் 22 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சமும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் செங்கல்பட்டில் விஷச்சாராயம் விற்ற அமாவாசை தானும் விஷச்சாராயம் குடித்ததாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவருக்கும் சேர்த்து ரூ. 50 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எடப்பாடி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் உயிரிழப்பிற்கு காரணமானவருக்கே அரசு நிவாரணம் அறிவித்துள்ளது என குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.
இதனிடையே கைது செய்யப்பட்டிருந்த அமாவாசைக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிவாரணத் தொகை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் சிகிச்சை பெற்று வருவதால் அமாவாசையின் பெயர் தவறுதலாக நிவாரணப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.