கனடா நாட்டில் இருந்து 20 வருடங்களுக்கு முன்பு அறிவொளி இயக்கம் பற்றி ஆய்வுக்கு வந்து பிராங்க்.. தமிழ்நாடு முழுவதும் பல மாதங்கள் சுற்றிய பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஷீலாராணி சுங்கத் தலைமையில் அறிவொளி இயக்கம் சிறப்பாக செயல்படுவதை அறிந்து ஆய்வுக்காக வந்தவர் ஆலங்குடி தாலுகா வடகாடு அருகில் உள்ள கோவில்பட்டி கிராமத்தில் அறிவொளி கருப்பையா என்பரின் வீட்டில் தங்கி இருந்து ஆய்வுகளை செய்து வந்தார். அப்படியே தமிழும் கற்றுக் கொண்டவர் தமிழ்நாட்டில் சுத்த தமிழில் பேசத் தொடங்கினார். ஆய்வுக்கு பிறகு கனடா சென்று தான் பணியாற்றும் பல்கலைக் கழகத்தில் ஆய்வறிக்கையை சமர்பித்தவர் அதன்பிறகு ஒவ்வொரு விடுமுறை காலத்திலும் தமிழ்நாட்டை மறப்பதில்லை. தனது குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை வைத்து அழகு பார்க்கிறார்.
தற்போது தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிராங்க். வழக்கம் போல கோவில்பட்டி கிராமத்தில் சில நாட்கள் தங்கி உள்ளார். அப்போது தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் 550 ஏக்கர் பரப்பளவுள்ள பெரிய குளத்தை கைஃபா என்ற இளைஞர் அமைப்பினர் தூர்வாரி சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருப்பதை அறிந்து அங்கு சென்று பணிகளைப் பார்த்தவர் வியந்து போனார். அடுத்த தலைமுறைக்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய பணி இது என்று பாராட்டினார்.
தொடர்ந்து அவர் பேசும் போது.. நான் 20 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு வந்தேன். அப்போது சென்னையில் நிறைய குளங்கள் இருந்தது. ஆனால் இப்போது அந்த குளங்களை காணவில்லை. அதேபோல புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களைப் பற்றியும் தெரியும். இப்போது தண்ணீர் பிரச்சனை அதிகமாக உள்ளது. இந்த நேரத்தில் அடுத்த தலைமுறைக்காக தண்ணீரை சேமிக்க குளம் தூர்வாருவது மிகப் சிறப்பானது. இதே போல மற்ற கிராமங்களிலும் இளைஞர்கள் முயற்சி செய்தால் அடுத்த தலைமுறைக்கு தண்ணீரை சேமித்து கொடுக்க வாய்ப்பாக இருக்கும் என்றார்.
கைஃபா இளைஞர்களின் அமைப்பு சொந்த செலவில் நீர்நிலை சீரமைப்பு பணியை தொடங்கி இருப்பதைப் பார்த்த தன்னார்வலர்கள் தானாக முன்வந்து அவர்களால் இயன்ற உதவிகளை செய்து வருவதுடன் நேரில் வந்து பாராட்டிச் செல்வது அந்த குழுவினருக்கு ஊக்கமாக உள்ளது. அதனால் தொடரந்து 10 நாட்களுக்கும் மேலாக சோர்வின்றி குளத்திற்குள் இறங்கி பணி செய்கிறார்கள்.