வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்திரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் என்பது நீண்ட நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் இந்தப் போராட்டத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில் லக்கிம்பூர் பகுதியில், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் சென்ற கார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளின் மீது மோதியது. இதில் விவசாயிகள் நான்கு பேர் மரணமடைந்தனர். மேலும், இப்பிரச்சனையை அடுத்து நடைபெற்ற கலவரத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
அந்த வகையில், சிதம்பரம் அருகே கிள்ளை கடைத்தெருவில் இன்று (04.10.2021) திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கற்பனைச்செல்வம் தலைமை தாங்கினார். திமுக மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் ராமதாஸ், காங்கிரஸ் கட்சியின் சார்பில் தங்கவேல் உள்ளிட்ட அனைத்து கட்சிகளைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தி விவசாயிகளைக் கொலை செய்த சம்பவத்தைக் கண்டித்தும் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.