திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தூசி காவல் நிலையத்திற்கு உட்பட்டது சின்ன ஏழாச்சேரி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன், ஏழுமலை என்கிற சகோதரர்கள் கல்குவாரி வைத்து நடத்தி வருகின்றனர். கடந்த 12ஆம் தேதி இரவு குவாரியின் உச்சியிலிருந்து கற்களை ஏற்றிக்கொண்டு கீழே இறங்கிய லாரி ( டி.என் ஆர் 3097) தலைகுப்புற கீழே விழுந்து விபத்தானது. இந்த விபத்தில் லாரியை இயக்கிய அரசாணிப்பாலை கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் மகன் நந்தகுமார் என்கிற பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் இளைஞன் பலத்த காயமடைந்தான். உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்தும் பயனளிக்காமல் மரணமடைந்தான்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் தரப்பட்ட புகாரில் சம்பவத்தை மறைத்து கல்குவாரியில் இருந்து வரும்போது மற்றொரு லாரி (டி.என்.சிபி2893) மோதி விபத்தாகி இந்த இளைஞன் இறந்ததாக புகார் தரப்பட்டது. இதுகுறித்து காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தன் பெயரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் உண்மை தெரியவந்தது.
இறந்த கல்லூரி மாணவனுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கடந்த 3 ஆண்டுகளாக லாரி ஓட்டுநராக இருப்பதும், கல்குவாரி பலவிதிமுறைகளை மீறி செயல்படுவது வெளியே தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என உண்மைகளை மறைத்ததாக தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கல்குவாரி உரிமையாளர்கள் சீனிவாசன், ஏழுமலை ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அதோடு என்னுடைய லாரியில் சிக்கி இறந்தான் என பொய் புகார் தந்த மற்றொரு லாரி ஓட்டுநர் அருள் கைது செய்யப்பட்டார். குவாரியில் உருண்டு விபத்தான லாரியின் உரிமையாளர் கோவிந்தராஜ் தலைமறைவாகியுள்ளார்.
இந்த விபத்தில் கல்குவாரி உரிமையாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பிரமுகர்கள் பலரும் காவல்துறைக்கு நெருக்கடி தந்துள்ளனர். ஆனால் செய்யாறு டி.எஸ்.பி வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் நெருக்கடிகளை கண்டுக்கொள்ளாமல் பொய்யாக ஒரு நாடகத்தை நடத்தி அதை மூடிமறைக்க முயன்றதை வெளிக்கொண்டுவந்துள்ளனர்.
இந்த குவாரியில் 6 மாதத்துக்கு முன்பு இதுபோன்ற விபத்து நடந்துள்ளது. அதையும் மூடி மறைத்துள்ளார்கள் என குற்றம்சாட்டுகிறார்கள் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.