வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இந்த புயல் காரணமாகத் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பாபட்லாவிற்கு அருகே தீவிரப் புயலாக நேற்று (05.12.2023) மாலை 4 மணியளவில் மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது.
இந்தநிலையில் 8 நாட்களுக்கு பிறகு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். கடந்த மாதம் 27ஆம் தேதியிலிருந்து புயல் எச்சரிக்கை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர். புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து இன்று மீன் பிடிக்கச் சென்றனர். நாகையில் அக்கரைப்பேட்டை,கீச்சாங்குப்பம் உள்ளிட்ட 25க்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். மீன் பிடிக்க தேவையான வலைகள், டீசல், ஐஸ் கட்டி, உணவு பொருட்கள் ஆகியவற்றை சேகரித்துக்கொண்ட மீனவர்கள், எட்டு நாட்களுக்குப் பிறகு இன்று மீன் பிடிக்க சென்றுள்ளனர். நாகை மட்டுமல்லாது கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.