பசுமை போர்த்திய கொடைக்கானலின் கவுஞ்சி கிராமத்தில் சாகச சுற்றுலாத்தலம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல் பகுதியில் உள்ள அழகான மலை கிராமம் தான் கவுஞ்சி. இந்த பகுதியின் மக்களின் பிரதான தொழிலே விவசாயமும், கால்நடைகளை மேய்ப்பதும்தான். இந்த நிலையில் அண்மையில் அங்கு மீன்பண்ணை அமைப்பதாக அரசு திட்டமிட்டது. ஆனால் இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்த அந்தப்பகுதி மக்கள் நீதிமன்றம் வரை சென்று அதை முறியடித்தனர். தற்போது சுற்றுலாத்துறை சார்பில் அங்கு ஒரு சாகச சுற்றுலாத்தலம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அறிவிப்பு கவுஞ்சி பகுதி மக்களுக்கு மீண்டும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே சுற்றுலா வருகிறோம் என்று சொல்லி வரும் பலர் கால்நடை மேய்க்கும் இடங்களில் மது பாட்டில்களையும் பிளாஸ்டிக் குப்பைகளையும் போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் எங்களுடைய நிலம் பாதிக்கப்படுவதோடு தாங்கள் மேய்க்கும் கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. அதன் தொடர்ச்சியாக தங்களுடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர் அந்த பகுதி மக்கள். இந்த நிலையில் சாகச சுற்றுலாத்தலம் அமைத்தால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். நாங்கள் எங்கள் நிலத்திலேயே கால்நடைகளை மேய்க்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் சாகச சுற்றுலாத்தலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடத்திற்கு சென்ற அப்பகுதி மக்கள் திடீரென அமர்ந்து, எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். உங்களுடைய கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து அந்த பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.