தொழில் போட்டியில் வடமாநில கும்பலுடன் சேர்ந்து, திமுக பிரமுகரைத் தாக்கிக் கொல்ல முயற்சி செய்ததாக அவருடைய முன்னாள் ஊழியர் உள்பட 7 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த, மல்லசமுத்திரம் அருகே உள்ள அவினாசிப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் முருகேசன் (50), திமுக பிரமுகர். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர், மல்லசமுத்திரம் ஒன்றியக்குழு திமுக கவுன்சிலராக உள்ளார்.
முருகேசன், சொந்த ஊரில் பேப்பர் கோன் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். மேலும், தனியார் நிறுவனங்களுக்குத் தேவையான வடமாநில தொழிலாளர்களை அவுட்சோர்சிங் அடிப்படையில் பணிக்கு அமர்த்தும் மேன்பவர் கன்சல்டசன்சி நிறுவனமும் நடத்தி வருகிறார்.
மோர்பாளையம் அருகே உள்ள ராமாபுரத்தைச் சேர்ந்த சரவணன் என்ற வாலிபர், இவரிடம் கார் ஓட்டுநராகவும், மேன்பவர் கன்சல்டன்சி நிறுவனத்தின் மேலாளராகவும் 7 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். அவுட்சோர்சிங் மூலம் பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களின் வருகை பதிவேட்டில் கோல்மால் செய்ததில் பல லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததால் சரவணனை, கடந்த 4 ஆண்டுக்கு முன்பு வேலையில் இருந்து நிறுத்தி விட்டார் முருகேசன்.
இதையடுத்து முருகேசனுக்குப் போட்டியாக அவரும் மேன்பவர் கன்சல்டன்சி தொழில் தொடங்கி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, சரவணன் தன்னிடம் வேலை செய்தபோது அவருக்கு முருகேசன் 5 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தில் 2.70 லட்சம் ரூபாய் திருப்பிக் கொடுத்துள்ளார். மீதம் 2.30 லட்சம் ரூபாயைத் திருப்பித் தருமாறு முருகேசன் அவரிடம் அடிக்கடி செல்ஃபோனிலும், நேரிலும் கேட்டு வந்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, சரவணனிடம் வேலையில் இருந்த வடமாநில தொழிலாளர்கள் சிலர், முருகேசனிடம் வேலைக்குச் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் மோதல் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை (பிப். 8) மாலை, சதீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற வாலிபர், முருகேசனை தொடர்பு கொண்டு, வேலை தேடி வந்திருப்பதாகவும், உங்களைச் சந்திக்க வேண்டும் என்றும், மோர்பாளையத்துக்கு வருமாறும் அழைத்துள்ளார். அப்போது திருச்செங்கோட்டில் இருந்த முருகேசன், ரமேஷ் அழைத்ததன் பேரில் மோர்பாளையத்துக்குச் சென்றார்.
மோர்பாளையம் சந்தை அருகே ஒரு வேகத்தடை வந்தபோது, பின்தொடர்ந்து காரில் வந்த கும்பல் முருகேசனை வழிமறித்து நின்றது. அந்தக் காரில் இருந்து சரவணன், ராமாபுரத்தைச் சேர்ந்த தினேஷ் உள்பட 7 பேர் 'திபுதிபு'வென இறங்கினர். முருகேசனை காரை விட்டு இறங்காதபடி தடுத்துக்கொண்டனர். அப்போது சரவணன், தன்னிடம் வேலைக்கு வந்த ஆட்களை நீ எப்படி உன்பக்கம் இழுக்கலாம் எனக் கேட்டுள்ளார். அதற்கு முருகேசன், தொழிலாளர்கள் விருப்பத்தின் பேரில்தான் தன்னிடம் வேலைக்குச் சேர்ந்ததாகக் கூறியுள்ளார். மேலும், கடனைத் திருப்பிக் கேட்டதற்கும் சரவணன் மிரட்டியுள்ளார்.
ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர், செருப்பு காலாலேயே முருகேசனை காருக்குள் வைத்து சரமாரியாக எட்டி உதைத்துள்ளார். சரவணனும் கூட்டாளிகளும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். மோர்பாளையம் சந்தையில் இருந்த பொதுமக்கள் முருகேசனுக்கு ஆதரவாகக் கூடியதால், அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. முருகேசனிடம் செல்ஃபோனில் பேசிய ரமேஷ் என்ற வடமாநில வாலிபரும் சரவணனின் ஆள்தான் என்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து முருகேசன் பிப். 9ம் தேதி மல்லசமுத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். முதல்கட்டமாக சரவணனை அழைத்து விசாரித்துள்ளனர். புகார் அளித்து இரண்டு நாள் ஆகியும் எஃப்ஐஆர் பதிவு செய்யாமல் காவல்துறையினர் காலம் கடத்தியுள்ளனர். புகாரைத் திரும்பப் பெறுமாறு முருகேசனிடம் வற்புறுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜின் கவனத்துக்கும் சென்றுள்ளது. மல்லசமுத்திரம் காவல்துறையினர் மட்டுமின்றி திருச்செங்கோடு டிஎஸ்பி அசோக் குமாரும் விசாரணை நடத்தி வருகிறார். முருகேசன் மீதான தாக்குதல், மோர்பாளையம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.