அரசு விரைவுப் பேருந்துகள் பயணத்தின்போது உணவு நேரத்திற்காக நிறுத்துகையில், பயணிக்கும் திசையின் இடதுபுறத்தில் உள்ள உணவகத்தில்தான் நிறுத்த வேண்டும் என அரசுப் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசு விரைவுப் பேருந்தின் கிளை மேலாளர்கள், கோட்ட மேலாளர்கள் ஆகியோருக்கு பொது மேலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசு விரைவுப் பேருந்துகள் பயணத்தின்போது உணவு நேரத்திற்காகப் பேருந்துகளை நிறுத்தும்போது பயணிக்கும் திசையின் இடதுபுறத்தில் உள்ள உணவகத்தில்தான் நிறுத்த வேண்டும். இடதுபுறம் நிறுத்தாமல் எதிர்த் திசையில் உள்ள உணவகத்திற்கு வாகனத்தைத் திருப்பும்போது விபத்துகள் ஏற்பட்ட வாய்ப்புள்ளது. எனவே கட்டாயம் பேருந்துகளை இடதுபுறம் உள்ள உணவகத்தில்தான் நிறுத்த வேண்டும். இதை மீறும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.