உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.
இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.