நடப்பு நிதியாண்டில் கடுமையான நிதி நெருக்கடியிலும் கடன் சுமையிலும் தத்தளிக்கும் எடப்பாடி அரசு, கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசிடம் 12 ஆயிரம் கோடி நிதி உதவியைக் கேட்டிருந்தது. ஆனால், எடப்பாடி அரசுக்கு 500 கோடி என சொற்பத் தொகையை மட்டுமே வழங்கியுள்ளது மத்திய அரசு.
இப்படிப்பட்ட நிலையில், கரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்த தேவைப்படும் நிதி நிலைமையைச் சமாளிக்க, அரசு கஜானாவை வலுவாக்கும் முயற்சியில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்காகப் பொது மக்களிடமிருந்து நிதி திரட்ட திட்டமிட்டது. அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார் எடப்பாடி.
தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி கொட்டும் என ஏக எதிர்பார்ப்பில் இருந்தது எடப்பாடியின் கேபினெட்! ஆனால், எதிர்பார்ப்பு நிறைவேறாததில் அப்-செட்டாகியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி.
இது குறித்து, நம்மிடம் பேசிய தலைமைச் செயலகத்திலுள்ள நிதித்துறையினர், "பொது வெளியில் இருந்து 5000 கோடி திரட்ட திட்டமிட்டிருந்தாலும், அதிகபட்சம் 1000 கோடியாவது திரட்டிட வேண்டும் எனவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதற்கேற்ப , முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பிரபலங்களிடமிருந்து 1000 கோடி கிடைக்கும் எனவும் எதிர்பார்த்திருந்தனர். |
ஆனால், முதல்வரின் நிவாரண நிதியில் வேகம் குறைந்து விட்டது. கடந்த 15 நாட்களில் 135 கோடி ரூபாய்தான் கிடைத்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 1000 கோடி இலக்கு சாத்தியமில்லை என நிதித்துறை அதிகாரிகள் தரப்பில் முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டது. கரோனா வைரஸின் தாக்கம் கடுமையாக இருந்த கடந்த 20 நாட்களில் கிடைக்காத நிதி உதவி, இனிமேல் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில்லாததுதான். எதிர்பார்க்கப்பட்ட பிரபலங்கள் , தொழிலதிபர்கள் பலரும் ஏமாற்றி விட்டதாக நினைக்கிறார் எடப்பாடி. அதனால் அவர் ரொம்பவும் அப்-செட்!" என்கின்றனர்.