திருப்பூரை அடுத்துள்ள பாண்டியன் நகரில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் ஏராளமான நாட்டு வெடிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது வீட்டில் இன்று (08.10.2024) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 9 மாத குழந்தை, ஒரு பெண் என மொத்தம் மூன்று பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வெடி விபத்தில் அருகில் இருந்த 10 வீடுகள் சேதமடைந்தன. இது தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த விபத்திற்கு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகளே காரணம் எனத் தெரியவந்தது.
அதோடு கார்த்திக் வீட்டில் இருந்த சுமார் 50 கிலோ வெடி மருந்தைப் பறிமுதல் செய்த போலீசார் பாதுகாப்பாக அதனை அங்கிருந்து அகற்றினர். அதே சமயம் சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு நடத்தினர். திருப்பூரில் நாட்டு வெடிகள் வெடித்த விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பட்டாசு தயாரிப்பு உரிமத்தை ஈரோட்டில் வைத்துள்ள சரவணகுமார் என்பவர், அவரது உறவினரான கார்த்திக்கின் வீட்டில் வைத்து கோயில் விழாவுக்குச் சட்ட விரோதமாகப் பட்டாசு தயாரிக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்தது.
இந்த விபத்து நிகழ்ந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அதே சமயம் இந்த வெடி விபத்து தொடர்பாக 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து இந்த வெடிவிபத்து ஏற்பட்டது தொடர்பாக திருமுருகன் பூண்டி போலீசார் வெடிபொருள் சட்டம் பிரிவு 3இன் படி 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே, ‘தமிழகத்தின் திருப்பூரில் மர்மப் பெண் ஒருவர் வெடிகுண்டு தயாரிக்க முயன்றபோது வெடிகுண்டு வெடித்தது’ என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இந்நிலையில் இந்த சம்பத்தில் உண்மை என்ன? என்று தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.
அதில், “இது தவறான தகவல். ‘ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியில் சரவணகுமார் என்பவர் நடத்தி வந்த பட்டாசுக்கடையின் உரிமம் முடிவடைந்ததால் அவரது கடைக்குச் சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து, திருப்பூரில் உள்ள தனது சகோதரி வீட்டில் 2 வாரங்களாகச் சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்று வீட்டிலிருந்த கோயில் திருவிழாவின் போது பயன்படுத்தும் பட்டாசுகள் (வெடி) எதிர்பாராதவிதமாக வெடித்ததால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்’ என்று திருப்பூர் காவல்துறை விளக்கமளித்துள்ளது. ஆனால், சமூக வலைத்தளங்களில் வெடிகுண்டு வெடித்ததாகத் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. எனவே வதந்தியைப் பரப்பாதீர்” எனக் கூறப்பட்டுள்ளது.