நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக கேரளா மாநிலம் கள்ளிக்கோட்டைக்கு செல்வதற்காக கடந்த 4ஆம் தேதி தமிழக அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பேருந்தில், நடத்துநராக பாபு என்பவர் பணியாற்றினார்.
இந்த நிலையில், கூடலூருக்கு பேருந்து சென்றதும், அதில் காபிக்காடு பகுதிக்கு செல்லும் சில பள்ளி மாணவ- மாணவிகள் அந்த பேருந்தில் ஏறினர். அப்போது, தங்களது நிறுத்தம் வந்ததும், அந்த பேருந்தை நிறுத்துமாறு மாணவ - மாணவிகள் நடத்துநர் பாபுவிடம் கூறியுள்ளனர். ஆனால், அவர், இந்த நிறுத்தத்தில் பேருந்து நிற்காது என்று கூறியதுடன் மட்டுமல்லாமல் அவர்களிடம் கடிந்து கொண்டு பேசினார். ஆனாலும், அந்த மாணவ - மாணவிகள் பேருந்தை நிறுத்துமாறு தொடர்ந்து வற்புறுத்தியதால், சிறிது தூரத்தில் பேருந்தை நிறுத்தி அவர்களை இறக்கிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த பேருந்து புறப்பட்டதும் அங்கிருந்த சில பயணிகள், மாணவ - மாணவிகள் தானே அவர்களிடம் கடிந்து கொள்ளாமல் கொஞ்சம் அனுசரித்து இறக்கி விட்டிருக்கலாமே என்று கூறியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த பாபு, அந்த பயணிகளிடம் ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுப்பது போல் பேசியுள்ளார். இதை, அந்த பேருந்தில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அவர், “இது என்ன லோக்கல் வண்டியா? அங்க இங்க நிறுத்த சொல்ற.... பைத்தியக்காரனா நீ” என்று திட்டினார். மேலும் அவர், ’எங்க கிட்டேயே சட்டம் பேசுறியா, எனக்கே சொல்லித் தர்றியா, போட்டுத் தள்ளிருவேன் பாத்துக்க,’ என்று ஒருமையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், பயணிகளுக்கும் அவருக்கும் கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டது.
பயணிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த நடத்துநர் பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்குவரத்து கழக பொது மேலாளர் செல்வகுமார் விசாரணை நடத்தி, பயணிகளிடம் கணிவாக நடந்து கொள்ளாத நடத்துநர் பாபுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், அவர் இது குறித்து 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.