சிவகங்கை அருகே அரசு பேருந்தில் பயணச்சீட்டு எடுக்காததால் குழந்தையுடன் சென்ற பெண்ணை பேருந்து நடத்துனர் தாக்கிய வீடியோ காட்சிகள் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சாத்தனை பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை அவரது குழந்தையுடன் இளையான்குடி செல்லும் அரசு பேருந்தில் பயணித்துள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பயணச்சீட்டு கொடுக்க பேருந்தின் ஓட்டுனர் முன் பக்கம் வரவில்லை எனக் கூறப்படுகின்ற நிலையில் திருவேங்கடம் அருகே புதுக்குளம் பகுதியில் திடீரென டிக்கெட் பரிசோதகர் ஏறி பரிசோதனை செய்தபோது லக்ஷ்மி பயணச்சீட்டு பெறவில்லை என்பது தெரியவந்தது. இதனை அடுத்து பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த லட்சுமிக்கு 200 ரூபாய் அபராதம் விதித்தார்.
லட்சுமி பயணச்சீட்டு பரிசோதகரிடம் முன்பக்கம் தான் இருக்கும் இடத்திற்கு டிக்கெட் எடுக்க நடத்துனர் வரவில்லை அதனால் தான் தன்னிடம் பயணச்சீட்டு இல்லை என பரிசோதகரிடம் புகார் சொல்லியுள்ளார். அப்போதே நடத்துனருக்கும் லட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தன்னிடம் 200 ரூபாய் இல்லை என்று கூறிய லட்சுமி இளையான்குடி பேருந்து நிலையத்தில் இறங்கிய பின்பு அபராத தொகையை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அடுத்த நிறுத்தத்தில் பரிசோதகர் இறங்கி சென்று விட இளையான்குடி நோக்கி சென்றது பேருந்து.
பேருந்து இளையான்குடி வந்ததும் லட்சுமி தனது குழந்தையுடன் கீழே இறங்கி உள்ளார். அப்போது அபராத தொகையான 200 ரூபாய் ரூபாயை நடத்துனர் கேட்டதால் நடத்துனர் பூமிநாதனுக்கும் லட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அந்த வாக்குவாதத்தின் போது நடத்துனர் பூமிநாதன் சம்பந்தப்பட்ட பெண்ணான லட்சுமியை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடத்துனர் தாக்கியதால் காயமடைந்த லட்சுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த சம்பவத்தை வீடியோ காட்சியாக பதிவு செய்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த காட்சி வைரலாக தற்போது நடத்துனர் பூமிநாதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.