இந்தியாவில் 23 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றில் திருச்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகம் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தான் போட்டியிட்ட ஶ்ரீரங்கம் தொகுதியில் சிறப்பு அந்தஸ்து கொண்டு வர வேண்டும் என்றும், பல்கலைகழகம் கொண்டு வர வேண்டும் என்றும் கொண்டுவந்தார்.
சட்டப் படிப்பிற்கென தனிச்சிறப்பாக உருவாக்கப்பட்டவையே இத்தேசிய சட்டப்பல்கலைக்கழகங்கள். இவை தேசிய சட்டப் பல்கலைக்கழகம் என அழைக்கப்பட்டாலும் அவற்றை நாடாளுமன்றம் உருவாக்குவதில்லை மாறாக அந்தந்த மாநிலங்களின் சட்டமன்றங்களே உருவாக்குகின்றன.
ஆகவே சட்டப் பல்கலைக்கழகங்கள் அனைத்துமே மாநில பல்கலைக்கழகங்களே. பொதுவாக பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில ஆளுநர்களோ அல்லது நாட்டின் குடியரசுத் தலைவர்களோ இருப்பது மரபு. ஆனால் தேசிய சட்டப்பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரையிலே அவ்வாறாக இல்லை. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியோ அல்லது அந்தந்த மாநிலங்களின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியோ தான் அங்கே வேந்தராக இருக்க முடியும்.
2012 ஆம் ஆண்டு, முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி துணை வேந்தர் பேராசிரியர் கமலா சங்கரன்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இருபத்தி ஐந்தாம் தேதி தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தால் ஒரு பணிசேர்ப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. பேராசிரியர், இணை பேராசிரியர், இணை துணை பேராசிரியர், இணை நூலகர், துணை நூலகர் என இருபத்தி மூன்று பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை அப்பல்கலைக்கழகத்தின் இணை பதிவாளர் வெளியிட்டுள்ளார்.
அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கமலா சங்கரன் வெளியிட்ட இந்த அறிக்கைக்கு பின்னால் விதி மீறல்கள் அதிகம் இருக்கிறது என்கிற குற்றசாட்டு வெளியாகி உள்ளது. இது குறித்து பேராசிரியர்கள் சிலர் நம்மிடம் பேசும் போது…
தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகச் சட்டம் 2012 இன் படி பதிவாளர் மட்டுமே பணிசேர்ப்பு அறிக்கையை வெளியிட முடியும். ஆனால் இந்த பல்கலைகழக்கத்தில் மூன்று மாத ஒப்பந்தம் அடிப்படையில் தற்காலிக பணியில் உள்ள இணை பதிவாளர் இவ்வறிக்கையை வெளியிடுமாறு செய்ய வைத்திருக்கிறார் துணை வேந்தர் பேராசிரியர் கமலா சங்கரன். பணி சேர்ப்பு அறிக்கையை வெளியிட கல்விக்குழுவின் பரிந்துரை வேண்டும். கல்விக்குழுவின் பரிந்துரை இன்றி நிர்வாக குழு அறிக்கையினை வெளியிட முடியாது. ஆனால் இங்கே நிர்வாக குழு நேரடியாக இதனை பரிந்துரை செய்திருக்கிறது. ஒருவேளை கல்விக்குழுவில் இது பற்றிய விவாதம் நடந்தால் பேராசிரியர்கள் இதனை தடுத்து நிறுத்திவிடுவார்கள் என்று பயந்து கமலா சங்கரன் யாருக்கும் தெரியாமல் நிர்வாக குழுவின் ஒப்புதலைப்பெற்று இவ்வறிக்கையினை வெளியிட்டுள்ளார். பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழு எடுக்கும் முடிவுகள் அனைத்தும் படு ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது. பேராசிரியர்களுக்கும் நிர்வாக குழுவிற்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கிறது. யாருடனுடன் தொடர்பு இல்லாமல் இருக்கிறது.
தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகச் சட்டம் 2012 முழுமையாக மீறப்பட்டிருக்கிறது. துணைவேந்தர்கள் தங்களுடைய பணிக்காலம் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு எவ்வித கொள்கை முடிவுகளையும் எடுக்க கூடாது என தமிழக அரசால் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ள நிலையில் இங்கே முற்றிலுமாக மீறப்பட்டிருக்கிறது.
ஏனென்றால் இப்போது தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தின் அடுத்த துணை வேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் நீதிமன்றத்தை நாடிய பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி வேலுமணி வழக்கை தள்ளுபடி செய்துவிட்டார்.
தனியார் பெருநிறுவனம் போல் கேவியட் மனு தாக்கல் செய்து படு பாதுகாப்பாய் துணைவேந்தர் கமலா சங்கரன் செயலாற்றி வருகிறார். இவ்வளவு அவசரம் காட்டுவதன் பின்னணி என்ன என்று புரியவில்லை. நீதிபதிகளே பல்கலைக்கழகத்தின் நிர்வாக அவையிலும் பொது அவையிலும் இருப்பதாலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே பல்கலையின் வேந்தராகவும் இருப்பதாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இப்போது சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யாமல் உச்சநீதி மன்றத்தை நாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. துணைவேந்தர் கமலா சங்கரனின் அத்துமீறல்களால் தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு பெரும் இன்னல் விளைந்திருக்கிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாய் நீதி வழங்க வேண்டிய நீதியரசர்களே விதிமீறல்களுக்கு காரணகர்த்தர்களாக இருந்திருக்கின்றனர்.
சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி நியமிக்கப்படாத இந்நேரத்தில் பல்கலையின் சார்பு வேந்தராக விளங்கும் சட்ட அமைச்சர் சி. வி சண்முகம் இதில் உடனே தலையிட்டு இவ்வறிக்கையினை நிறுத்த வேண்டும். என்பது பேராசிரியர்கள் கோரிக்கையாக உள்ளது.