வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் மகமதுபுரம் பகுதியை சேர்ந்த அண்ணன் தம்பிகளான ஸ்ரீதர், முரளி ஆகியோர் தங்களது குடும்பத்துடன் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்திருந்தனர். மகமதுபுரம் பகுதியில் உள்ள தங்களின் விவசாய நிலத்திற்கு செல்ல வழி இல்லை என்றும், நாங்கள் பயன்படுத்தி வந்த ஊர் நத்தம் (பொது இடம்) பாதையில் முன்னாள் பாமக ஊராட்சி மன்ற தலைவர் அசோகன் என்பவர் முரம்பு மண்ணை கொட்டிவிட்டு அகற்றாமல் மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து அரசின் பல்வேறு இடங்களில் புகார் அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததால், தற்போது வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ரீதர் மற்றும் முரளி, தங்கள் மீதும் குழந்தைகள் இருவர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயற்சி செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்த காவலர்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு குழந்தைகளுடன் இரு வாலிபர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து கே.வி.குப்பம் வட்டாட்சியர் கலைவாணியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “இந்த பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே மனு வரப்பெற்றுள்ளது. அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். நிலத்திற்கு ஏற்கனவே பயன்படுத்தி வந்த பாதை ஊர் நத்தத்தில் உள்ளது. ஆனால் முரளி தரப்பினர் குற்றம் சாட்டும் எதிர் தரப்பினர் இது எங்கள் சொந்த இடம், இந்த இடத்திற்கு பட்டா இருப்பதாக சொல்கிறார்கள். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் நில அளவையர்கள் மூலம் இடம் அளவீடு செய்யப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.