குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த அண்ணனை தம்பி கொலை செய்ததும், அதற்கு உடந்தையாக இருந்த தாயும் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பீமநகர் சேர்ந்தவர் பர்வீன் பானு (வயது 48). இவருக்கு தமிமுன் அன்சாரி (வயது 33), சையது அபுதாஹிர் ( 29) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் தமிமுன் அன்சாரி ஆட்டோ டிரைவராகவும், டீ மாஸ்டராகவும் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 5 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
குடி போதைக்கு அடிமையான தமிமுன் அன்சாரியின் நடவடிக்கை பிடிக்காததால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னர் தினமும் தமிமுன் அன்சாரி தனது தாயிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்தார். நேற்று இரவு தனது தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்ட தம்பி சையது அபுதாஹிர் வீட்டில் இருந்த அரிவாளால் தமிமுன் அன்சாரியின் தலையில் வெட்டினார். இருப்பினும் ஆத்திரம் அடங்காமல் அவரது கழுத்தில் மின்வயரை சுற்றி இறுக்கினார். இதில் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே தமிமுன் அன்சாரி இறந்து விட்டார். விபரீதத்தை உணர்ந்த பர்வீன் பானு அதிகாலை 4 மணி அளவில் யாரும் அறியாத வகையில் சையது அபுதாகீருடன் சேர்ந்து தமிமுன் அன்சாரியின் உடலை அவரது ஆட்டோவிலேயே ஏற்றிக்கொண்டு கொள்ளிடம் ஆற்றில் நீரில் போட்டு விட்டு வர முடிவு செய்தார்.
அதன்படி கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் உடலை இறக்கும் போது இருசக்கர வாகனங்கள் வரவே உடலை அங்கேயே போட்டுவிட்டு ஆட்டோவில் தப்பி விட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.பாலத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவினை ஆய்வு செய்து ஆட்டோ நம்பரை கண்டுபிடித்தனர். பின்னர் ஆட்டோ உரிமையாளர் யார்? மாநகர சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில் கொலையாளிகள் பர்வீன் பானு மற்றும் சையது அபுதாகிர் என உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து வீட்டில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.