Skip to main content

தாலி கட்டும் நேரத்தில் அதிர்ச்சி தந்த மணமகள் - ஏமாற்றத்துடன் திரும்பிய மணமகன்

Published on 13/09/2018 | Edited on 13/09/2018
The groom is shocked


தாலி கட்டும் நேரத்தில் மணமேடைக்கு வர மறுத்து மணமகள் அடம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மணமகன் ஏமாற்றத்துடன் திரும்பிய நிகழ்வு ஏற்பட்டது. 
 

தஞ்சை தெற்கு வீதி ஜவுளி செட்டி தெருவைச் சேர்ந்தவர் சிவா. 32 வயதான இவருக்கு திருமணத்திற்காக பெண் பார்த்தனர். இதில் வல்லம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்து இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 
 

முகூர்த்த தேதியான 12.09.2018 புதன்கிழமை காலை திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்தன. முதல் நாள் மாலையே மண்டபத்தில் உறவினர்கள் வந்திருந்தனர். பின்னர் மணமகள் அழைத்து வரப்பட்டார். 
 

காலையில் உறவினர்கள், ஊர் மக்கள், நண்பர்கள் என வந்தனர். அவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. முகூர்த்த நேரம் வருவதால் மணமகன் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார். 
 

புரோகிதர் மந்திரங்களை ஓதினார். காலை 10 மணிக்கு மணமகளை அழைத்து வரச் சொன்னார் புரோகிதர். மணமகளை அழைத்து வர உறவினர்கள் சென்றனர். அப்போது மணமகள் மணமேடைக்கு வர மறுத்தார். 
 

இந்த விசயம் உடனே அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. மணமகள் அறைக்கு சென்ற பெற்றோர் என்னவென்று விசாரித்துள்ளனர். அப்போது எனக்கு இந்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
 

தாலி கட்டும் நேரத்தில் குடும்ப மானத்தை வாங்கி விடாதே, மணமேடைக்கு வா என்று பெற்றோர்கள் கூறியுள்ளனர். எந்த சமாதானமும்  செய்ய வேண்டாம். நான் வர மாட்டேன் என்று கூறி மறுத்துவிட்டார்.
 

நேரம் ஆகிறது என்று புரோகிதர் கூற, அப்போது மணமகள் வர மறுத்த விசயம் வெளியே கசிந்தது. இதையடுத்து இரு வீட்டு உறவினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண்ணே மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறும்போது நாங்கள் என்ன பண்ண முடியும் என்று கேட்டுள்ளனர்.
 

இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் திருமண மண்டபத்திற்கு வந்து உறவினர்களிடம் பேசினார்கள். பின்னர் மணமகளிடம் பேசினார்கள்.


அப்போது அவர், தான் தஞ்சையில் கூரியர் அலுவலத்தில் வேலை பார்க்கும்போது ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை காதலிப்பதாக கூறியிருக்கிறார். அவரையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாவும் கூறியிருக்கிறார்.
 

இதனை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்த மணமகன் சிவா, இதனை பெண் பார்க்க வராங்க என்று சொல்லும்போதே சொல்லியிருந்தால் நாங்கள் வந்திருக்க மாட்டோம். இந்த திருமண ஏற்பாடும் நடந்திருக்காது. ஏன் என்னை இப்படி செய்துவிட்டாய் என்றார். 
 

இதற்கு மணமகள் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார். எல்லா நஷ்டமும் எங்களுக்குத்தான் என்று கூறிய மணமகன், இந்த திருமணம் வேண்டாம் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
 

மணமகன் வீட்டார், இந்த திருமணத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறோம். அந்த தொகையை தரும்படி கேட்டுள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் பேசிக்கொள்ளலாம் என்று அங்கு சென்றனர்.
 

அங்கு வந்த மணமகள் வீட்டார், அவ்வளவு பணம் எங்களிடம் இல்லை என்று கூறினர். நீண்ட நேரம் பேசி பார்த்தும், மணமகள் வீட்டார் எங்கள் வீட்டில் அவ்வளவு வசதி இல்லை என்று கூறியதால், இருதரப்பும் காவல்நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்