கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற, கடலூர் மாவட்ட அரசு மதுபானக்கடைகளுக்கான டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்ட இருவரை போலீஸார் இன்று (23.10.2024) கைது செய்தனர்.
கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் திருவேங்கடத்திடம், கடலூர் மாவட்ட டாஸ்மாக் அலுவலக இளநிலை உதவியாளர் ராதாகிருஷ்ணன் என்பவர், தங்களது மேலாளர் பற்றியும், தீபாவளிக்கு வசூல் செய்வது குறித்து தகவல் வந்தால் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். தீபாவளி நேரத்தில் சோதனை செய்யக்கூடாது எனத் தெரிவித்து ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வந்துள்ளார். அவரிடம் இந்த தொகை யார் கொடுக்கச் சொன்னது எனக் கேட்ட போது, டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமார் கொடுக்கச் சொன்னதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து காவல் ஆய்வாளர் திருவேங்கடம் இதுகுறித்து டிஎஸ்பி சத்யராஜிடம் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் சேத்தியாத்தோப்பு சென்னிநத்தம் விஜய கணேசா திருமண மண்டபத்தில் டாஸ்மாக் மண்டல மேலாளர் செந்தில்குமார் தலைமையில் இன்று நடைபெற்ற டாஸ்மார்க் விற்பனையாளர்கள் மற்றும் சூப்பர்வைசர்கள் கலந்தாய்வுக் கூட்ட வளாகத்திற்குள் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சத்யராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நுழைந்து டாஸ்மார்க் மண்டல மேலாளர் செந்தில்குமாரைக் கைது செய்தனர். லஞ்ச தொகை கொடுக்க முயன்ற இளநிலை உதவியாளர் ராதாகிருஷ்ணனையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.25 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.